நவராத்திரி விழாவை முன்னிட்டு மானாமதுரையில் கொலு பொம்மை தயாரிப்பு பணி மும்முரம்

நவராத்திரி விழாவை முன்னிட்டு மானாமதுரையில் கொலு பொம்மை தயாரிப்பு பணி மும்முரம்
Updated on
1 min read

நவராத்திரி விழா நெருங்கி வருவதால் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மண்ணில் தயாராகும் நவராத்திரி கொலு பொம்மைகளை வாங்க ஆர்டர்கள் குவிந்து வருகின்றன.

மானாமதுரை மண்பாண்டப் பொருட்களுக்கு உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது. இங்கு சீசனுக்கு ஏற்ப பானைகள், அடுப்புகள், கூஜாக்கள், முளைப்பாரி சட்டிகள், அக்னிச் சட்டிகள், அலங்கார கலைப் பொருட்கள் உள்ளிட்டவை தயாரிக்கப்படுகின்றன.

இத்தொழிலில் மானாமதுரை குலாலர் தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றன. அக்.17-ம் தேதி நவராத்திரி விழா தொடங்கி 9 நாட்கள் நடக்க உள்ளது. இதையொட்டி கோயில்கள், வீடுகளில் கொலு பொம்மைகள் வைத்து பூஜை செய்வது வழக்கம்.

இதற்காக கொலு பொம்மைகளை மானாமதுரை மண்பாண்டத் தொழிலாளர்கள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இந்தாண்டு சரஸ்வதி, மகாலெட்சுமி, ஐஸ்வர்ய லெட்சுமி, முருகன், விநாயகர், பள்ளிகொண்ட பெருமாள், திருப்பதி பிரம்மோற்சவ செட், பிரதோஷ மூர்த்திகள், அரசியல் தலைவர்கள், ஐயப்பன், குரு வாயூரப்பன், சாய்பாபா, விஷ்ணு, சிவன், பார்வதி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு விதமான பொம்மைகளை தயாரித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொலு பொம்மைகளை வாங்கிச் செல்கின்றனர். மேலும் வெளி மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் மூலம் ஆர்டர்கள் குவிந்து வருகின்றன.

இதுகுறித்து மண்பாண்டத் தொழிலாளர்கள் கூறுகையில், ‘சீசனுக்கு ஏற்ப மண்பாண்டப் பொருட்கள் தயாரிக்கும்போதே கிடைக்கும் ஓய்வு நேரங்களில் கொலு பொம்மைகளையும் தயாரித்து விடுவோம். நவராத்திரி விழா தொடங்குவதற்கு 15 நாட்களுக்கு முன்னதாக பொம்மைகளை விற்பனைக்கு காட்சிப்படுத்துவோம். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து கொலு பொம்மைகளைப் பார்வையிட்டு வாங்கிச் செல்வர்’ என்று கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in