

அதிமுக- பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை எனவும், கொள்கைரீதியாக அதிமுகவும், பாஜகவும் இணைந்து பயணம் செய்வதாகவும் பாஜக மாநிலதுணைத் தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம் வயலூரில்வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் 9-வது பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த பாஜகமாநில துணைத் தலைவர் கே.அண்ணாமலை ஒத்தக்கடையிலுள்ள மன்னர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாஜக- அதிமுக கூட்டணியில் எந்த கருத்து வேறுபாடோ, குழப்பமோ இல்லை. தெளிவான பார்வையில், நேர்கோட்டில்தான் உள்ளோம். கொள்கைரீதியாக அதிமுகவும், பாஜகவும் ஒன்றாக இணைந்து பயணம் செய்து கொண்டுள்ளோம். திமுகவினர் குடும்ப அரசியல் உட்பட அனைத்து விஷயங்களிலும் மிதமிஞ்சி உள்ளனர்.
தமிழ்நாட்டில் பாஜக தனித்து போட்டியிடும் அளவுக்கு பலமில்லாமல் இல்லை. வேகமாக வளர்ந்து வருகிறது. பேரவைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதா, கொள்கையுடன் ஒத்துப்போகும் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதா என்பதை கட்சித் தலைமைதான் முடிவெடுக்க வேண்டும் என்றார். வீர முத்தரையர் முன்னேற்ற சங்க நிறுவனர் கே.கே.செல்வக்குமார் உடனிருந்தார்.