Published : 29 Sep 2015 10:44 AM
Last Updated : 29 Sep 2015 10:44 AM

விழி இழந்தும் உழைப்பை நம்பும் டூவீலர் மெக்கானிக்: இளைஞர்களுக்கு வழிகாட்டும் கண்ணப்பன்

“இந்தத் தொழில்ல வர்ற வருமானத்தை வெச்சி ஏதோ கஷ்டப்படாம நானும் அம்மாவும் கஞ்சி குடிக்கிறோம். அடுத்து சொந்தமா ஒரு வீடு வாங்கணும். அடுத்ததா இன்னொரு ஆசை இருக்கு. இந்த மெக்கானிக் ஷாப்பை இன்னும் பெரிசாக்கணும்.

இந்தத் தொழிலை உண்மையா விரும்புற இளைஞர்களுக்குப் பயிற்சி தந்து அவர்களோட எதிர்காலத்துக்கு ஏணிப்படியா இருக்கணும்” என்று கடந்த 2013-ம் ஆண்டு ‘தி இந்து’வில் வெளியான சிறப்புக் கட்டுரையில் கூறியவர் பார்வையற்ற டூவீலர் மெக்கானிக் கண்ணப்பன்.

ஒன்றரை ஆண்டு இடைவெளி யில் ஆசைப்பட்ட இடத்தை நோக்கி வேகமாக முன்னேறி இருக்கிறார் திருச்சியைச் சேர்ந்த கண்ணப்பன். 4 வயதில் நோய்த் தாக்குததால் கண் பார்வையை இழந்த கண்ணப்பனுக்கு வீட்டுக்கு அருகில் இருந்த டூவீலர் மெக் கானிக் கடையே உலகம். அங்கு தொழில் கற்றவர், எந்த நிறுவனத் தின் வாகனம், அதில் என்ன பழுது என்பதையெல்லாம் வாகனத்தின் சத்தத்தைக் கொண்டே கண்டுபிடிக் கும் திறமையைப் பெற்றார்.

8 ஆண்டுகளுக்கு முன் திருச்சி உறையூர் காவல் நிலையம் அருகே 10-க்கு 10 அளவில் எஸ்.என்.டூவீலர் மெக்கானிக் கடையைத் தொடங்கியவரை நம்பி வாகனத் தைக் கொடுக்க யாரும் முன்வர வில்லை. அவசரத்துக்கு வேறு வழி யின்றி இவரிடம் சிறு சிறு வேலைக் காக வாகனத்தைக் கொடுத்தவர் கள், மீண்டும் இவரிடமே வரும் அளவுக்கு தொழில் நேர்த்தி கைவரப் பெற்றவர் கண்ணப்பன்.

வேலை முடிந்தவுடன் உரிமை யாளரை ஓட்டச் சொல்லி பின்னால் இவர் உட்கார்ந்தவாறு ஒரு ரவுண்டு சென்று வந்து திருப்தியடைந்த பின்னரே வாகனத்தை ஒப்படைப் பார். பார்வையில்லாத கண்ணப்ப னின் கவனம் முழுவதும் பழுது நீக்குவதிலேயே இருக்கும். ஒரு கட்டத்தில் வாடிக்கையாளர் எண் ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகவே, கடந்த மாதம் திருச்சி ராமலிங்க நகர் தெற்கு விஸ்தரிப்பு பகுதியில் உள்ள ஒரு காம்ப் ளக்ஸில் 4 கடைகளை மொத்தமாக வாடகைக்குப் பிடித்து எஸ்.என். மோட்டார்ஸ் என்று பெரிய அளவில் விரிவாக்கம் செய்துவிட்டார்.

இதில் ஆச்சரியம் என்னவென் றால் கடை இருப்பதோ மாடியில். சர்வீஸ் மற்றும் பழுது நீக்கத்துக்கு வரும் வாகனங்கள் ஹைடெக் லிப்ட் மூலம் மாடிக்கு ஏற்றிச் செல்லப் படுகிறது. தற்போது லியோ, ரமேஷ், கோபி என தன்னுடன் 3 இளைஞர்களை இணைத்துக் கொண்டு செயல்படுகிறார்.

தனது முன்னேற்றம் குறித்து கண்ணப்பன் ‘தி இந்து’விடம் பகிர்ந்துகொண்டது:

இழந்ததை நினைத்து வருத் தப்படுவதில் எந்தப் பயனும் இல்லை. நான் இந்த பூமியில் பிழைக்கவும், என்னைச் சார்ந்து வருபவர்களை வாழ வைக்கவும், கண் பார்வையில்லாத என்னுடைய காதுகளுக்கு இறைவன் அதீத சக்தியைக் கொடுத்துள்ளார். அதுவே போதும்.

மாதம் 2 ஆயிரம் ரூபாய் வாடகைக் கடையில் தொழிலைத் தொடங்கிய நான், இப்போது மாதம் ரூ.13 ஆயிரம் வாடகை கொடுக்கிறேன்.

தினமும் குறைந்தது 7 வண்டியாவது சர்வீஸுக்கு வருகிறது. புதிதாக வண்டி வாங்கியவர்கள் கூட கேரன்டி காலம் முடியும் முன்னரே என்னிடம் சர்வீஸுக்கு கொடுப்பார்கள்.

இன்றைய காலகட்டத்தில் டூவீலர் பழுது பார்ப்பது என்பது போட்டி நிறைந்த தொழிலாக உள்ளது. அதனால் நேர்மையான அணுகுமுறை மற்றும் நேரத்துக்கு டெலிவரி என்பதை குறிக்கோளாகக் கொண்டு வேலை செய்கிறேன்.

இப்போதைக்கு 4 பேருக்கும் வேலை சரியாக இருக்கிறது. கடையை விரிவுபடுத்தியவுடன் முதற்கட்டமாக ஷோரூம் சர்வீஸ் சென்டர்போல அனைவரும் யூனிஃபார்ம் அணியத் தொடங்கி விட்டோம். அடுத்த கட்டமாக இன்னும் பெரிய நிறுவனமாக மாற்றி, முடிந்த வரை இன்னும் பலருக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x