Last Updated : 12 Oct, 2020 07:19 AM

 

Published : 12 Oct 2020 07:19 AM
Last Updated : 12 Oct 2020 07:19 AM

கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 4.12 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி: டெல்டா மாவட்டங்களில் 6.44 லட்சம் டன் அரிசி உற்பத்தியாகும்

தஞ்சாவூர் அருகே காட்டூரில் நடைபெறும் குறுவை அறுவடை பணி. (கோப்புப் படம்)

சென்னை

டெல்டா மாவட்டங்களில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சபட்ச சாதனையாக 4 லட்சத்து 12 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால், 6 லட்சத்து 44 ஆயிரம்டன் அரிசி உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேட்டூர் அணையில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு 3 மாதங்களாக 100 அடிக்கும் மேலாக நீர்மட்டம் இருந்தது. இதனால் நடப்பு ஆண்டில் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட்டது. மேட்டூர் அணை திறக்கப்படுவதற்கு முன்பே குடிமராமத்துப் பணிகள்மூலமாக வரத்துக் கால்வாய்கள்தூர்வாரப்பட்டு, பாசன நீர் தங்குதடையின்றி செல்ல வழிவகைசெய்யப்பட்டது. இதனால் 15 நாட்களுக்கு முன்னரே வளமையான பாசன வயல்களுக்கும், 25 நாட்களுக்கு முன்பாகவே கடைமடைப் பாசனப் பகுதிகளுக்கும் தண்ணீர் போய்ச் சேர்ந்தது. இதனால் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேளாண் துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:

தமிழக அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் டெல்டா மாவட்டங்களில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சபட்ச சாதனையாக 4 லட்சத்து 12 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், திருந்திய நெல் சாகுபடி முறையில் சாகுபடி மேற்கொள்ள விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் ஆலோசனை வழங்கப்பட்டதால், 3 லட்சத்து 11 ஆயிரத்து 300 ஏக்கரில் திருந்திய நெல் சாகுபடி செய்யப்பட்டது. அத்துடன் முதன்முறையாக குறுவைப் பருவத்தில் நேரடி நெல் விதைப்பு முறை ஊக்குவிக்கப்பட்டு 32 ஆயிரத்து 357 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டது.

இதுதவிர, டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு சமுதாய நாற்றங்கால் அமைத்துவிவசாயிகள் ஊக்குவிக்கப்பட்டதால் பாசனநீர் மற்றும் இடுபொருட்கள் சிக்கனமாகப் பயன்படுத்தப்பட்டது.

இதனால் குறுவை சாகுபடி மூலம் டெல்டா மாவட்டங்களில் 6 லட்சத்து 44 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் 43 லட்சத்து 42 ஆயிரம் ஏக்கர் இயல்பான பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்யப்படும். இதில், 36 சதவீத பரப்பளவான 15 லட்சத்து 89 ஆயிரம் ஏக்கர், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் முழுவதும், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், கடலூர் மாவட்டங்களில் சிலபகுதிகளிலும் சாகுபடி செய்யப்படு கிறது. 2020-2021-ம் ஆண்டில் நெல் சாகுபடியை மேலும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x