Published : 12 Oct 2020 07:13 AM
Last Updated : 12 Oct 2020 07:13 AM

ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் 14 நிறுவனங்களுடன் முதல்வர் முன்னிலையில் இன்று ஒப்பந்தம்: பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு

சென்னை

தமிழகத்தில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் 14 தொழில் நிறுவனங்களுடன் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் இன்றுஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் குறித்தும் முதல்வர் இன்று ஆய்வு செய்கிறார்.

அதிமுகவில் நிலவிவந்த முதல்வர் வேட்பாளர் சர்ச்சையை தொடர்ந்து, கடந்த 7-ம் தேதி, முதல்வர் வேட்பாளராக முதல்வர் பழனிசாமியே அறிவிக்கப்பட்டார். சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு, முதல்வர் பழனிசாமி இன்று காலை தலைமைச் செயலகத்துக்கு வருகிறார். நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் காலை 10 மணிக்கு நடக்கும் கூட்டத்தில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள், துயர் தடுப்பு மற்றும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்கிறார்.

இதில், தலைமைச் செயலர் க.சண்முகம், வருவாய் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் பனீந்திர ரெட்டி மற்றும் அனைத்து துறை செயலர்கள், மாவட்டங்களுக்கான சிறப்பு அதிகாரிகள் பங்கேற்கின்றனர். தமிழகம் முழுவதும் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு தயார்நிலையில் வைத்திருப்பது, மழைநீர் வடிகால்களின் தற்போதைய நிலை, ஆக்கிரமிப்புகள் அகற்றம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

இதைத் தொடர்ந்து, தனது அலுவலகம் வரும் முதல்வர், பகல் 12 மணிக்கு தொழில் துறை சார்பில், தமிழகத்தில் 14 புதிய தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

ஏற்கெனவே கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் கரோனா பாதிப்புக்கு இடையிலும், அதிக அளவில் முதலீடுகளை பெற்ற மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தற்போது வரை 42புதிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம்மேற்கொண்டு ரூ.30 ஆயிரம் கோடிக்கு அதிகமான முதலீடுகளை தமிழகம் பெற்றுள்ளது.

இந்நிலையில், இன்று ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 7 ஆயிரம்பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், 14 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது. இதில் குறிப்பாக, ஜேஎஸ்டபிள்யூ எனர்ஜி, அப்போலோ டயர்ஸ், பிரிட்டானியா பிஸ்கெட் நிறுவனம், ஐநாக்ஸ் திரவஆக்ஸிஜன் தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்டவை அடங்கும்.

இதில் ஓசூரில் ஐநாக்ஸ் திரவஆக்ஸிஜன் நிறுவனமும், சென்னை அடுத்த ஒரகடத்தில் அப்போலோ டயர்ஸ் நிறுவனமும் தொழிற்சாலை தொடங்க உள்ளன. திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டானில் பிரிட்டானியா பிஸ்கெட் நிறுவனம் தனதுதொழிற்சாலையை நிறுவ உள்ளதாக தெரிகிறது.

முதல்வர் பழனிசாமி நாளை (13-ல்) தூத்துக்குடி செல்கிறார். அங்கு கரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு செய்யும் அவர், மறுநாள் (அக்.14) கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் கரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்துவிட்டு சென்னை திரும்புகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x