

பாதிப்புக்குள்ளாகும் பொதுமக்களின் இருப்பிடத்துக்கே சென்று விரைந்து உதவ 353 ரோந்து வாகனங்களின் பணியை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் முடுக்கிவிட்டுள்ளார்.
சென்னை பெருநகரில் குற்றச் செயல்களை முற்றிலும் தடுக்க காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
24 மணி நேரமும் பொதுமக்களின் அவசர அழைப்பை ஏற்று அவர்களை தேடிச்சென்று உதவும் வகையில் போலீஸார் தயார் நிலையில் இருக்கும்படி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, சென்னை பெருநகர காவல் துறையில் உள்ள 12 காவல் மாவட்டங்களுக்கும் தலா ஒரு காவல் நிலையத்துக்கு 4 வகையான ரோந்து வாகனங்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. மொத்தம் 353 சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்பு மற்றும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளன.
குற்றவாளிகளால் பாதிக்கப்படும் பொதுமக்கள், போலீஸாரின் உதவி தேவைப்படுவோர் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100-க்கு அழைத்தால், பொதுமக்களின் இருப்பிடத்துக்கே விரைந்து சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அழைப்பு வந்ததும் விரைவாக சம்பவ இடத்துக்கு செல்ல வேண்டும் என்றும் ரோந்து போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது பொதுமக்களுக்கு பெரும் உதவியாக உள்ளதாக காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். இதன்மூலம் குற்றச்செயல்கள் வெகுவாக குறைந்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.