

காட்பாடியில் கரகாட்ட பெண் கலைஞர் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி ரொக்கம் மற்றும் 73 பவுன் தங்க நகைகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. ஆந்திர மாநிலத்துக்கு தப்பி ஓடிய கரகாட்ட பெண் கலைஞரை போலீஸார் தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர்.
வேலூர் கஸ்பா பகுதியைச் சேர்ந்தவர் மோகனாம்பாள் (50). கரகாட்ட கலைஞர். இவருடன் தொழில் ரீதியான பழக்கம் உள்ள கரகாட்ட கலைஞர் ஜமுனா (55). காட்பாடி தாராபடவேடு கோவிந்தராஜி முதலி தெருவில் ஜமுனாவுக்கு சொந்த வீடு உள்ளது. இந்த வீட்டில் கடந்த இரண்டரை மாதங்களாக மோகனாம்பாள் வாடகைக்கு வசித்து வருகிறார். இவரது வீட்டுக்கு இரவு நேரங்களில் சந்தேக நபர்கள் அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.
இந்நிலையில், மோகனாம்பாள் வீட்டில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை காலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மோகனாம்பாள் தங்கியிருந்த வீட்டுக்கு போலீஸார் சென்றபோது, வீடு பூட்டியிருந்தது. செல்போன் மூலம் மோகனாவை தொடர்பு கொண்டு, வீட்டை சோதனையிட வந்திருப்பதாக போலீஸார் கூறியுள்ளனர். உடனடியாக வருவதாக கூறிய மோகனாம்பாள், இரவு 7.30 மணி வரை வரவில்லை.
இதையடுத்து, வருவாய் துறையினர், வீட்டின் உரிமையாளர் ஜமுனா மற்றும் அக்கம் பக்கம் வசிப்பவர்கள் முன்னிலையில் வீட்டின் பூட்டுகள் உடைக்கப்பட்டன. வீட்டின் உள்ளே டைனிங் டேபிளுக்கு அடியில் இருந்த சாக்கு மூட்டை, அட்டைப் பெட்டியை பிரித்துப் பார்த்தபோது, அதில் கட்டுக் கட்டாக 1000, 500, 100 ரூபாய் நோட்டுகள் இருந்தன. ஒரு பிளாஸ்டிக் கவரில் தங்க நகைகள் இருந்தது.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், “வீட்டில் இவ்வளவு பணம் இருக்கும் என நாங்கள் நினைக்கவில்லை. சாக்கு மூட்டையில் பணத்தை பார்த்ததும் அதிர்ச்சி ஆகிவிட்டோம். இவ்வளவு பணம் மோகனாவுக்கு கிடைக்க வாய்ப்பே இல்லை என விசாரணையின்போது வீட்டு உரிமையாளர் ஜமுனா தெரிவித்தார். பணத்தை எண்ண முடியாமல் திணறியதால் அடகுக் கடை ஒன்றில் ரூபாய் நோட்டுகளை எண்ணும் மெஷினை எடுத்து வந்து, மொத்த பணத்தையும் எண்ணினோம். இதற்கு 3 மணி நேரத்துக்கு மேல் ஆனது. நகை மதிப்பீட்டாளர்களை வரவழைத்து நகையை கணக்கிட்டோம்.
ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டும் ரூ.3.13 கோடிக்கு இருந்தது. மீதம் 500, 100 ரூபாய் நோட்டுகளாக இருந்தன. தங்க நகைகள் 592 கிராம் அளவுக்கு இருந்தன. வெள்ளி 81.600 கிராம், கையெழுத்து இடப்பட்ட வெற்று பத்திரங்கள் இருந்தன. ரூ.6.60 லட்சம் வங்கி டெபாசிட் ரசீது பறிமுதல் செய்யப்பட்டது. இவை அனைத்தும் முறையாக கணக்கிட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.
ரொக்கப் பணம், நகையை பதுக்கி வைத்த மோகனாம்பாளின் சகோதரி மகன் சரவணன் என்பவர் செம்மரக் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர். மற்றொரு உறவினர் தீனா என்ற தீனதயாளன் என்பவர் பைனான்ஸ் தொழில் செய்கிறார். இவர்களுக்கும் மோகனாம்பாளுக்கும் தொழில் ரீதியான உறவுகள் என்ன? என்பதுகுறித்து விசாரணை நடத்திவருகிறோம். சட்டவிரோத செயல்களில் மோகனா ஈடுபட் டுள்ளாரா? என்பது குறித்தும் தொடர்ந்து விசாரிக்கிறோம். அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். ஆந்திர மாநிலத்துக்கு அவர் தப்பி ஓடிவிட்டார் என தகவல் கிடைத்துள்ளது. அவரை பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்றனர்.