

மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பீட்டை 2022 ஆம் ஆண்டு வரைக்கும் மத்திய அரசு சரிக்கட்டும் என்றார்கள். ஆனால் கொடுத்தார்களா? இல்லை. பணம் கேட்டால், மாநிலங்களுக்குக் கடனாகத் தருகிறோம் அல்லது மாநில அரசுகள் யாரிடமாவது கடன் வாங்கிக் கொள்ளட்டும் என்கிறது மத்திய அரசு. இது மத்திய அரசா? அல்லது கந்துவட்டி அரசா? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
திருவள்ளூர் தெற்கு மாவட்டம் திமுக சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் காணொலி வாயிலாகப் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:
''ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் உத்தரப் பிரதேசமோ, பிஹாரோ எப்படி இருந்தது? இன்று எப்படி இருக்கிறது என்பதை ஒப்பிட்டுப் பார்ப்பவர்களுக்குத்தான் திமுகவின் சாதனைகள் என்ன என்பது தெரியும். சிலை வைத்தார்கள், பேர் வைத்தார்கள், நினைவு மண்டபம் கட்டினார்கள் என்று சிலர் கொச்சைப்படுத்தலாம்.
ஆனால், தொழில் துறைக்கு, நீர்ப்பாசனத் துறைக்கு, மின்சாரத் துறைக்கு, கல்வித் துறைக்கு, மருத்துவத் துறைக்கு திமுக ஆட்சி செய்த சாதனைகளைச் சொல்ல வேண்டுமானால் அதற்குப் பல மணி நேரம் ஆகும்.
சில நாட்களுக்கு முன்னால், ஒரு அறிவிப்பை முதல்வர் செய்திருந்தார். 'தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம்' என்பதான் அந்தச் செய்தி. இன்னும் ஆறு மாதத்தில் ஆட்சியே முடியப் போகிறது. நாற்காலியை விட்டு இறங்கப் போகிறார். ஆனால், பொருளாதார வளர்ச்சிக்குத் தொடர்ந்து பாடுபடுவோம் என்று சொல்கிறார் என்றால் எந்த நாட்டில் வாழ்கிறார் பழனிசாமி?
2011 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டை ஆள்கிறது அதிமுக. பொருளாதார வளர்ச்சிக்கு என்ன செய்தார்கள்? கொண்டு வந்த திட்டங்கள் என்ன? திறந்துவைத்த பெரிய தொழிற்சாலைகள் என்ன? எத்தனை லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்தீர்கள்? ஒரு முறையல்ல, இரண்டு முறை உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தினீர்களே? எத்தனையாயிரம் கோடி, எத்தனை லட்சம் கோடி முதலீடு வந்தது? முதல்வரும், துணை முதல்வரும், அமைச்சர்களும் நாடு நாடாகப் போனீர்களே?
இதனால் தமிழ்நாடு அடைந்த பலன் என்ன? எத்தனை தொழிற்சாலைகளைக் கொண்டு வந்தீர்கள்? அதற்கு முதலில் பழனிசாமி பதில் சொல்லட்டும். அதன்பிறகு தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை வளர்க்கலாம்.
முதல்வர் பழனிசாமி பேப்பர் படிப்பது இல்லையா? மத்திய அரசு சமீபத்தில் ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டது. அதாவது ‘மாநிலத் தொழில் சீர்திருத்தச் செயல் திட்டம்’ என்ற அறிக்கையை மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டது. எளிதாக தொழில் நடத்துவதற்கான சூழலை மேம்படுத்தும் மாநிலங்களின் தரவரிசைப் பட்டியல் அது. இதில் 14 ஆவது இடத்தில் தமிழகம் இருக்கிறது.
14 ஆவது இடத்தில் இருக்கும் தமிழகத்தில் தொழில் தொடங்க யார் வருவார்கள்? இந்தப் புள்ளிவிவரத்தை வெளியிட்டது மத்திய அரசு. இதைவிட மோசமான ஆட்சிக்கு ஆதாரம் வேண்டுமா? திமுக ஆட்சியில் இருந்தபோது மூன்றாவது இடத்தில் தமிழகம் இருந்தது. அதுதான் உண்மையான சாதனை. 14 ஆவது இடத்தில் இருப்பது சாதனை அல்ல, வேதனை!
எனக்கு முன்னால் பேசிய வழக்கறிஞர் அருள்மொழி தமிழ்நாட்டின் உரிமையை எந்தெந்த வகையில் எல்லாம் எடப்பாடி அரசு காவு கொடுத்துள்ளது என்பதை வரிசையாகப் பட்டியலிட்டார். உரிமையைக் கேட்டால், தனது நாற்காலி பறிபோய்விடும் என்பது பழனிசாமிக்குத் தெரியும். அதனால்தான் தனது நாற்காலியைக் காப்பதற்காக தமிழ்நாட்டையே டெல்லி பாஜகவுக்கு அடமானம் வைத்துவிட்டார் பழனிசாமி.
கூட்டாட்சித் தத்துவத்தையே மத்திய அரசாங்கம் மதிக்கவில்லை. மாநில அரசுகளை அதிகாரம் பொருந்திய ஜனநாயக அமைப்புகளாகவே மத்திய அரசு நினைக்கவில்லை. இதனை எடப்பாடி பழனிசாமி கேள்வி கேட்க வேண்டாமா? வரி வசூலில் மாநிலங்களுக்கு இருந்த உரிமையை ஜி.எஸ்.டி. வரி பறித்துவிட்டது. இப்படித்தான் ஆகும் என்பதால் இந்த வரிமுறையையே ஆரம்பத்தில் இருந்து நாம் எதிர்த்தோம்.
மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பீட்டை 2022 ஆம் ஆண்டு வரைக்கும் மத்திய அரசு சரிக்கட்டும் என்றார்கள். ஆனால் கொடுத்தார்களா? இல்லை. பணம் கேட்டால், மாநிலங்களுக்குக் கடனாகத் தருகிறோம் அல்லது மாநில அரசுகள் யாரிடமாவது கடன் வாங்கிக் கொள்ளட்டும் என்கிறது மத்திய அரசு. இது மத்திய அரசா? அல்லது கந்துவட்டி அரசா?
மாநிலங்கள் சேர்ந்த ஒன்றியம்தானே இந்தியா? அப்படியானால் மாநில உரிமைகளை மறுப்பது ஏன்? மாநிலங்களுக்கு வரவேண்டிய வருவாயைத் தடுத்து, அவர்களே கொண்டு போய்விட்டு, மாநிலங்களைப் பிச்சை எடுக்க வைப்பது ஏன்? இதை எல்லாம் முதல்வர் பழனிசாமி கேட்க மாட்டார். அவருக்கு பன்னீர்செல்வத்தோடு சண்டை போடுவதிலேயே காலம் ஓடிவிட்டது. அவர் எங்கே மத்திய அரசோடு சண்டை போடப்போகிறார்?
இதனைத் தமிழகம் எதிர்க்காவிட்டாலும், சில மாநிலங்கள் கடுமையாக எதிர்த்துள்ளன. அந்த மாநிலத்தை ஆள்வது முதுகெலும்பு உள்ள முதல்வர்கள். கரோனா காலத்தில் கடந்த ஆறு மாதத்தில் மட்டும் 50 ஆயிரம் கோடி வரைக்கும் தமிழக அரசு கடன் வாங்கியதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.
கரோனா காலத்திலும் கடன் வாங்குவதை முதல்வர் பழனிசாமி நிறுத்தவில்லை. மக்களுக்கு உதவி செய்வதற்காக கடன் வாங்கவில்லை. கொள்ளையடிக்க கடன் வாங்கி உள்ளார்கள். ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் மக்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் கொடுங்கள் என்று ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்து சொல்கிறேன். ஆனால் தரவில்லை. ஏன் தரவில்லை? பணமில்லையா? பணம் இருக்கிறது? ஆனால் மனமில்லை! அதுதான் உண்மை.
சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்காக சில ஆயிரம் கூட தரத் தயங்கும் பழனிசாமி, தனது ஆட்சியைத் தக்க வைக்க பல நூறு கோடிகள் செலவு செய்யத் தயாராக இருக்கிறார். தமிழ்நாட்டைக் கடன்கார மாநிலமாக ஆக்குவதில்தான் பழனிசாமி சாதனை செய்துள்ளார்''.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.