Last Updated : 11 Oct, 2020 07:29 PM

 

Published : 11 Oct 2020 07:29 PM
Last Updated : 11 Oct 2020 07:29 PM

வரலாற்றுச் சிறப்புமிக்க ராணி மங்கம்மாள் குளம்; சீரமைப்புக்குப் பின் அமைச்சர் வீரமணி திறந்து வைத்தார்: ஆர்வமுடன் திரண்ட பொதுமக்கள்

ராணி மங்கம்மாள் குளத்தை அமைச்சர் கே.சி.வீரமணி திறந்து வைத்தார். குளத்தை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டையில் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க‘ராணி மங்கம்மாள் குளம்’ரூ.35 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்டுள்ளது. இக்குளத்தை தமிழக வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி இன்று திறந்து வைத்தார்.

கி.பி.17-ம் நூற்றாண்டில் (1689-1704) மதுரையை ஆட்சி செய்த ராணி மங்கம்மாள் தன் ஆட்சிக்காலத்தில் மக்கள் நலம் பேணும் பல அறச்செயல்களைச் செய்தார். மதுரையில் மிகப்பெரிய அன்னசத்திரம் அமைத்தார். அந்தச் சத்திரம் இன்றும் மங்கம்மாள் சத்திரம் என அழைக்கப்படுகிறது.

இது மட்டுமின்றி கன்னியாகுமரி - மதுரை இடையேயான நெடுஞ்சாலை மங்கம்மாள் சாலை என அழைக்கப்படுகிறது. அந்தக் காலத்தில் சாலைவழிப் பயணம் பெரிதாக இருந்ததால் சாலையோரங்களில் குதிரைகள், பசுக்கள், காளைகள் நீர் அருந்த ‘தண்ணீர் தொட்டிகள்’ அமைத்தார். மேலும், பொதுமக்கள் வசதிக்காக குடிநீர் ஊருணிகள், கிணறுகள், குளம் ஆகியவற்றை அதிக அளவில் அமைத்தார்.

அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகம் அருகாமையில் பெரிய குளம் ஒன்றை கி.பி.17-ம் நூற்றாண்டில் அமைத்தார். இக்குளம் 38 மீட்டர் அகலமும், 38 மீட்டர் நீளமும், 8 மீட்டர் ஆழமும் கொண்டதாக உள்ளது. சுமார் 48 லட்சம் லிட்டர் தண்ணீரை இதில் சேமிக்க முடியும்.

ஏலகிரி மலையில் இருந்து வரும் மழைநீர் இக்குளத்தில் நிரம்பினால் நகர்ப்புற மக்களின் நீர் ஆதாரம் தீர்க்கப்படும் என்பதால் அந்தக் காலத்திலேயே இக்குளம் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பழமை வாய்ந்து இக்குளம் போதிய மழையின்மை காரணத்தால் வறண்டுபோனது. மேலும் குளத்தைச் சுற்றிலும் சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்ததால் குளம் நீரின்றிக் காணப்பட்டது.

போதிய பராமரிப்பு இல்லாததால் வரலாற்றுச் சிறப்புமிக்க ராணி மங்கம்மாள் குளம் பொலிவிழந்து, புதர் மண்டிக் காணப்பட்டது. குளம் இருக்கும் சுவடே தெரியாமல் போனது. இதைக் கண்ட பொதுமக்கள் குளத்தைச் சீரமைக்க வேண்டும் என அரசுக்குக் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், அதற்கான முயற்சிகள் தொடங்காததால், ஜோலார்பேட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த இளைஞர்கள், தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள், இயற்கை மீட்பு ஆர்வலர்கள் ஒன்றிணைந்து புகழ்மிக்க ராணி மங்கம்மாள் குளத்தைச் சீரமைக்க முடிவுசெய்து அதற்கான பணிகளை கடந்த 2017-18 ஆம் ஆண்டு தொடங்கினர்.

இதற்கு ஜோலார்பேட்டை, ஏலகிரி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆதரவு அளித்தனர். பொன்னேரி அரசு மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியைச் சேர்ந்த என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்கள் தாங்களாக முன்வந்து குளத்தைச் சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

இதையறிந்த தமிழக அரசு கிட்டத்தட்ட 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராணி மங்கம்மாள் குளத்தைப் புனரமைக்க ‘சுவாசம்’ திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக ரூ.12 லட்சம் ஒதுக்கீடு செய்தது. அதன்பிறகு பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. மொத்தமாக ரூ.35 லட்சம் செலவில் வரலாற்றுச் சிறப்புமிக்க ராணி மங்கம்மாள் குளம் புதுப்பொலிவுடன் சீரமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, குளம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்தார். எஸ்.பி. விஜயகுமார் முன்னிலை வகித்தார். தமிழக வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி குளத்தைத் திறந்து வைத்துப் பேசும்பேது, ''திப்பு சுல்தான் ஆட்சிக் காலத்தில் ராணி மங்கம்மாள் இங்கு வந்து தங்கியபோது இந்தக் குளம் கட்டப்பட்டது. காலப்போக்கில் சிதலமடைந்த குளம் தற்போது சீரமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இக்குளத்தைச் சுற்றிலும் பூங்கா, நடைபாதை, பொழுதுபோக்கு அம்சங்கள் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விரைவில் நிறைவேற்றப்படும்'' என்றார்.

இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் மகேஷ்பாபு, நகராட்சி ஆணையாளர் ராமஜெயம், நகராட்சிப் பொறியாளர் தனபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க ராணி மங்கம்மாள் குளம் சீரமைக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜோலார்பேட்டை, நாட்றாம்பள்ளி, திருப்பத்தூர், வாணியம்பாடி சுற்றுவட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், குழுந்தைகளுடன் வந்து குளத்தின் அழகை கண்டு ரசித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x