

தமிழகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நாகப்பட்டினம் மாவட்ட செயற்குழுக் கூட்டம் நாகப்பட்டினம் அரசு ஊழியர் சங்கக் கட்டிடத்தில் மாவட்டத் தலைவர் து.இளவரசன் தலைமையில் இன்று நடைபெற்றது. நாகை வட்டச் செயலாளர் எம்.தமிழ்வாணன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்டச் செயலாளர் அன்பழகன் நடந்துள்ள வேலைகள் குறித்து எழுத்துபூர்வமான வேலை அறிக்கையைச் சமர்ப்பித்தார்.
மாவட்டப் பொருளாளர் அந்துவன்சேரல் நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பித்தார். வட்டங்களிலிருந்து வந்த நிர்வாகிகள் விவாதங்களுக்குப் பின்னர் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 75 மருத்துவ, சுகாதாரப்பணியாளர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட முன்களப் பணியாளர்கள் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர். அதுபோல மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் தன்னலம் கருதாது மக்கள் பணி ஆற்றியதன் விளைவாக கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களின் உடல் மற்றும் குடும்ப பராமரிப்புக்கு உதவியாக அரசு ஏற்கெனவே அறிவித்தபடி ஒவ்வொருவருக்கும் தலா ரூபாய் இரண்டு லட்சம் வழங்கிட வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.
இந்திய அரசியல் சாசன சட்ட அடிப்படையில் சங்கம் அமைப்பதும், அதில் அதன் உறுப்பினர்கள் நலன் சார்ந்து உரிய முறையில் முறையிடுவதும் அடிப்படை உரிமையாகும். அந்த அடிப்படையிலேயே தமிழக முதல்வர் மற்றும் அரசு உயர் அலுவலர்களைச் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் நலன் சார்ந்து சந்திப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் நமது மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்டோர் செயல்பட்டு வருவதும் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அப்படி தன்னைச் சந்தித்த சங்க மாவட்டத் தலைவர் து.இளவரசனைப் பணிக்கு இடையூறு செய்வதாகச் சொல்லி அவமானப்படுத்தி, ஊழியர் விரோத நடவடிக்கைகளைச் செயல்படுத்தி வரும் நாகப்பட்டினம் வருவாய் கோட்ட அலுவலர் பழனிக்குமார் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இதனை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நாகப்பட்டினம் மாவட்ட மையத்தின் சார்பில் எதிர்வரும் 21.10.20 அன்று நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவை உள்ளிட்ட மேலும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட நிர்வாகிகள் கே.இராஜூ, எம்.நடராஜன், பா.ராணி, சி.வாசுகி, ஜெ.ஜம்ருத்நிஷா, மாநிலப் பொருளாளர் மு.பாஸ்கரன், மாவட்டப் பொருளாளர் அந்துவன்சேரல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.