Published : 11 Oct 2020 06:00 PM
Last Updated : 11 Oct 2020 06:00 PM

அரசு எடுக்க வேண்டிய கொள்கை முடிவுகளை துணைவேந்தர் சூரப்பா எடுக்க முடியாது; அண்ணா பல்கலைக்கழகத்தில் 69% இட ஒதுக்கீட்டைப் பறிகொடுக்கக் கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்

அண்ணா பல்கலைக்கழகத்தில், 69% இட ஒதுக்கீட்டைப் பறிகொடுக்கக் கூடாது. துணைவேந்தர் என்பவர் பல்கலைக்கழகத்தை 3 ஆண்டுகளுக்கு வழிநடத்துவதற்காக நியமிக்கப்பட்டவர் மட்டுமே. அரசு எடுக்க வேண்டிய கொள்கை முடிவுகளை துணைவேந்தர் எடுக்க முடியாது. இந்த விஷயத்தில் சூரப்பாவின் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை

“சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை உயர்புகழ் தகுதி (Institute of Eminence) பெற்ற நிறுவனமாக அறிவிக்க வேண்டும்; அதற்குத் தேவையான நிதியை பல்கலைக்கழகமே திரட்டிக் கொள்ளும் என்று மத்திய அரசுக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா கடிதம் எழுதியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர்புகழ் தகுதி பெறும் விஷயத்தில் மாநில அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக துணைவேந்தர் சூரப்பா செயல்படுவது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

நாடு முழுவதும் 20 பல்கலைக்கழகங்களுக்கு உயர்புகழ் தகுதி வழங்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. அவற்றில் அண்ணா பல்கலைக்கழகமும் ஒன்றாகும். உயர்புகழ் தகுதி பெறுவதற்கான கட்டமைப்பு வசதிகளை அண்ணா பல்கலை.யில் ஏற்படுத்த ரூ.2,750 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்ட நிலையில், அதில் ரூ.1000 கோடியை மத்திய அரசு வழங்கும்; மீதமுள்ள ரூ.1,750 கோடியை அடுத்த 5 ஆண்டுகளில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தமிழக அரசு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு நிபந்தனை விதித்தது.

இதில் சில சிக்கல்கள் இருப்பதால் இதுகுறித்து முடிவெடுக்க அமைச்சர்கள் குழுவை தமிழக அரசு அறிவித்துள்ளது. எனினும், இந்த விஷயத்தில் அரசு கொள்கை முடிவு எடுக்கவில்லை. ஆனால், தமிழ்நாடு அரசுடன் எந்தவிதக் கலந்தாய்வும் நடத்தாமல் மத்திய அரசை நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளார் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா.

அண்ணா பல்கலைக்கழகத்தின் சொந்த ஆதாரங்களில் இருந்து 5 ஆண்டுகளில் ரூ.1570 கோடி நிதியை திரட்டிக் கொள்ள முடியும் என்றும், அதைக் கருத்தில் கொண்டு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர்புகழ் தகுதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறார். சூரப்பாவின் இந்தச் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர்புகழ் தகுதி பெறப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. இன்னும் கேட்டால் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இந்தத் தகுதியைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று முதன்முதலில் வலியுறுத்தியது நான் தான். ஆனால், அண்ணா பல்கலை.க்கு இந்தத் தகுதியைப் பெறுவதில் இரு சிக்கல்கள் உள்ளன.

முதலாவதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு 5 ஆண்டுகளில் ரூ.1000 கோடி வழங்கும் நிலையில், தமிழக அரசு ரூ.1750 கோடி தர வேண்டும். மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கு இந்தத் தகுதியை வழங்குவதற்காக முதலீடு செய்யப்பட வேண்டிய முழுத் தொகையையும் மத்திய அரசே வழங்கும் நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் முழுத் தொகையையும் மத்திய அரசே வழங்க வேண்டும் என்று தமிழக அரசு கோருகிறது.

ஆனால், அதை மத்திய அரசு ஏற்கவில்லை. இரண்டாவதாக, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர்புகழ் தகுதி வழங்கப்பட்டாலும் கூட, 69% இட ஒதுக்கீடு தொடரும் என மத்திய அரசு எழுத்துபூர்வமாக உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்துகிறது. ஆனால், இதைக் கொள்கை அளவில் ஏற்றுக்கொள்ளும் மத்திய அரசு, எழுத்துபூர்வமாக எந்த உத்தரவாதமும் அளிக்க தொடர்ந்து மறுத்து வருகிறது.

இத்தகைய சூழலில் சூரப்பா தன்னிச்சையாக மத்திய அரசை அணுகியது பல்கலைக்கழகத்திற்கும், மாணவர்களுக்கும் செய்த துரோகம் ஆகும். இட ஒதுக்கீட்டுச் சிக்கலுக்குத் தீர்வு காணாமல் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர்புகழ் தகுதி பெறுவதால் எந்தப் பயனும் கிடைக்காது. அண்ணா பல்கலை. உயர் புகழ் கல்வி நிறுவனமாக அறிவிக்கப்பட்டாலும் கூட, மத்திய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையும், மாணவர் சேர்க்கைக் கொள்கையும் கடைப்பிடிக்கப்பட்டால் தமிழ்நாட்டு மாணவர்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் எந்தப் பயனும் கிடைக்காது.

வெளிமாநில மாணவர்களும், உயர்வகுப்பினரும் மட்டும் தான் பயனடைவர். அதுமட்டுமின்றி, அண்ணா பல்கலைக்கழகமே 5 ஆண்டுகளில் ரூ.1,570 கோடி நிதியைத் திரட்டுவதாக வைத்துக் கொண்டாலும் அதற்காக கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம் ஆகியவற்றைக் கடுமையாக உயர்த்த வேண்டியிருக்கும். அதனால் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்படுவர். எனவே, இது ஏற்கத்தக்க யோசனை அல்ல.

இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் துணை வேந்தர் சூரப்பா தன்னிச்சையாக செயல்படுகிறார் என்றால், அண்ணா பல்கலைக்கழகத்தில் 69% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட வேண்டும் என்று நினைப்பவர்களின் கைப்பாவையாகச் செயல்படுகிறாரோ? என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது. மேலும், துணைவேந்தர் என்பவர் பல்கலைக்கழகத்தை 3 ஆண்டுகளுக்கு வழிநடத்துவதற்காக நியமிக்கப்பட்டவர் மட்டுமே.

அரசு எடுக்க வேண்டிய கொள்கை முடிவுகளை துணைவேந்தர் எடுக்க முடியாது. இந்த விஷயத்தில் சூரப்பாவின் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். 69% இட ஒதுக்கீடு, மாணவர் சேர்க்கை முறை, மாநில அரசின் கட்டுப்பாட்டில் நிர்வாகம் ஆகியவற்றுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர்புகழ் தகுதி பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்”.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x