Published : 11 Oct 2020 05:35 PM
Last Updated : 11 Oct 2020 05:35 PM

வலுப்பெற்ற காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்; 6 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

நேற்று மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனால் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழையும், தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவல்:

''நேற்று மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வட தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம்:

பஞ்சப்பட்டி (கரூர்) 9 செ.மீ., திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), திருச்சுழி (விருதுநகர்) தலா 5 செ.மீ., அரூர் (தருமபுரி), அலங்காயம் (திருப்பத்தூர்), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்) தலா 4 செ.மீ., தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), போளூர் (திருவண்ணாமலை), பெருந்துறை (ஈரோடு), வத்தலை அணை (திருச்சிராப்பள்ளி), காமாட்சிபுரம் (திண்டுக்கல்), குன்னூர் (நீலகிரி), மானாமதுரை (சிவகங்கை), பாலவிடுதி (கரூர்) தலா 2 செ.மீ.

நேற்று மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் . நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

அக்டோபர் 11 முதல் 15 ஆம் தேதி வரை குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அக்டோபர் 11 முதல் 14 ஆம் தேதி வரை அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அக்டோபர் 11 ஆம் தேதி அன்று மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதி, வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் ஆந்திரா , ஒடிசா கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்

அக்டோபர் 12 ஆம் தேதி மத்திய மேற்கு, வட மேற்கு, தென்மேற்கு வங்கக் கடல் பகுதி மற்றும் ஒடிசா கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அக்டோபர் 12 ஆம் தேதி ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 50 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கடல் உயர் அலை முன்னறிவிப்பு:

தென் தமிழக கடலோரப் பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை அக்டோபர் 12 ஆம் தேதி இரவு 11:30 மணி வரை கடல் அலைகளின் உயரம் 3.0 முதல் 3.7 மீட்டர் வரையிலும் , வட தமிழக கடலோரம் கலிமார் முதல் புலிக்காட் வரை கடல் அலைகளின் உயரம் 3.0 முதல் 3.3 மீட்டர் வரையிலும் எழும்பக்கூடும்''.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x