

கோமுகி அணையை திடீரென திறந்துவிட்டதால் ஏமப்பேர் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு பசுங்காயமங்கலம் குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணை சுமார் 1,000 ஏக்கர் பரப்பளவில் 46 அடி வரை நீரை தேக்கி வைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் நீர் கொள்ளளவு 560.96 மில்லியன் கனஅடி. இந்த அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர், ஆற்றுப் பாசனத் தின் மூலம் 5,865 ஏக்கர் விவசாய நிலமும், பிரதான கால்வாய் பாசனத்தின் மூலம் 5,000ஏக்கர் விவசாய நிலமும் பாசன வசதி பெற்றுவருகின்றன. கோமுகி அணையின் மூலம் கச்சிராயபாளையம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதிகளில் 70-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாய மக்கள் பயனடைந்து வருகின் றனர்.
மேலும், கோமுகி ஆற்றின் குறுக்கே சோமண்டார்குடி, கச்சிராயபாளையம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 11 இடங்களில் அணைகள் கட்டப் பட்டு, அதன்மூலம் ஏரிகளில் நீரை நிரப்பியும் விவசாயம் செய்கின்றனர்.
இதற்கிடையில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து கடந்த 1-ம் தேதி கோமுகி அணையிலிருந்து வினாடிக்கு பழைய பாசன வாய்க்காலில் 60 கனஅடியும், புதிய பாசன வாய்க்காலில் 50 கனஅடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் மழையால் அணைக்கான நீர்வரத்து 600 கன அடியாக உள்ளதால், அணையின் நீர்மட்டத்தை 44 அடியாக பராமரிக்கும் வகையில்பொதுப்பணித் துறையினர் நேற்று முன்தினம் இரவு விநாடிக்கு 1,000 கனஅடி தண்ணீரைதிறந்தனர்.பின்னர் நேற்று காலை தண்ணீர் வெளியேற்றத்தை 600 கன அடியாக குறைத்துள்ளனர். தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் ஏமப்பேர் வாய்க்காலில் தண்ணீர் பெருக்கடுத்து வாய்க் காலின் கரைப் பகுதிகள் உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்துவிட்டதாக பசுங்காயமங்கலம் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கூடுதல் தண்ணீர் திறந்ததால் தற்போது அந்த பகுதி தீவு போல் காட்சியளிக்கின்றன. குடியிருப்பு வாசிகள் வீட்டை விட்டு வெளியேற முடியாத வகையில் தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது. தண்ணீரை வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக பொதுப்பணித்துறை உதவிசெயற்பொறியாளர் சுதர்ஷனிடம் கேட்டபோது, “முறையாக மாவட்ட ஆட்சியர் முதல் வட் டாட்சியர் வரை தகவல் தெரிவித்து தான் தண்ணீர் திறக்கப்பட்டது” என்றார்.