

வேலூரில் முகநூல் பக்கத்தில் டிஎஸ்பி பெயரில் போலியான கணக்கைத் தொடங்கிய மோசடி கும்பல் பணம் வசூலிக்கும் முயற்சியில் ஈடுபட்ட தகவல் காவல் துறையினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காவல் துறை அதிகாரிகள் பெயரில் உள்ள முகநூல் கணக்கை போலியாக உருவாக்கி ஒரு கும்பல் பண மோசடியில் ஈடு பட்டு வருவதாக புகார் எழுந்துள் ளது.
இந்த மோசடியில் இருந்து தப்பிக்க காவல் அதிகாரிகள் தங் களது தனிப்பட்ட புகைப்படங்களை முகநூல் பக்கத்தில் இருந்து அகற்றி வருகின்றனர்.
இந்நிலையில், வேலூர் மாவட்டத்திலும் துணை காவல் கண்காணிப்பாளரின் பெயரில் போலியான முகநூல் கணக்கு தொடங்கி பணம் மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்த தகவல் நேற்று கிடைத்துள்ளது. வேலூர் மாவட்ட போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் ஏ.டி.ராமச் சந்திரன். இவர், வேலூர் மாவட்டத்தில் பல ஆண்டுகளாக உதவி ஆய்வாளர், ஆய்வாளர் என பல்வேறு நிலைகளில் பணியாற்றி வந்துள்ளார். இவரது பெயரில் உள்ள முகநூல் நட்பு வட்டாரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.
இந்நிலையில், ஏ.டி.ராமச் சந்திரனின் முகநூல் பக்கத்தில் ஏற்கெனவே பதிவு செய்திருந்த அவரது புகைப்படத்தை பதிவி றக்கம் செய்த மோசடி நபர்கள், அவரது முகநூல் கணக்கைப் போல் புதிய கணக்கை தொடங்கி யுள்ளனர். மேலும், அவரது நட்பு வட்டாரத்தில் உள்ள நண்பர்களுக்கு நட்புக்கான அழைப்பை மீண்டும் புதிதாக அனுப்பியுள்ளனர். இதைப் பார்த்து நட்பு வட்டத்தில் இணைத்த சில நிமிடங்களில் போலி முகநூல் கணக்கின் மெசஞ் சரில் இருந்து தனிப்பட்ட குறுஞ்செய்தி ஒவ்வொருக்கும் சென்றது.
அதில், வழக்கமான ‘ஹாய்’,‘ஹலோ’ என குறுஞ்செய்தியை அனுப்பிய மோசடி நபர்கள் அவசரமாக பணம் தேவைப்படு கிறது. ரூ.15 ஆயிரம் தொகையை கூகுள்பே அல்லது ஃபோன்பே வழியாக அனுப்பி வைக்கவும் இரண்டு நாளில் திருப்பிக் கொடுக்கிறேன் என பதில்வந்துள்ளது. இதைப்பார்த்து சந்தேகம் அடைந்த சிலர் டிஎஸ்பி ஏ.டி.ராமச்சந்திரனை தொடர்புகொண்டு கூறியுள்ளனர்.
இந்தத் தகவலால் அதிர்ச்சி யடைந்த அவர் பணம் கேட்க வில்லை என தெரிவித்துள்ளார். முகநூல் கணக்கை சரிபார்த்த போது பணம் மோசடியில் ஈடுபடும் கும்பல் ஏ.டி.ராமச்சந்திரன் பெயரில் போலியான முகநூல் கணக்கு தொடங்கியிருப்பது தெரியவந்தது.
இந்தத் தகவலை உடனடியாக தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்த ஏ.டி.ராமச்சந்திரன், தனிப்பட்ட முறையில் வாட்ஸ்-அப் குழுக்களிலும் மோசடி குறித்த தகவலை பதிவு செய்ததுடன் யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என எச்சரித்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் டிஎஸ்பி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி பணம் பறிக்க முயன்ற கும்பல் குறித்த தகவலால் வேலூர் மாவட்ட காவல் துறையினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ குமாரிடம் கேட்டதற்கு, ‘‘இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதுடன் காவல் அதிகாரி களுக்கும் எடுத்துரைக்கப்படும்’’ என தெரிவித்தார்.