Last Updated : 25 Sep, 2015 09:06 AM

 

Published : 25 Sep 2015 09:06 AM
Last Updated : 25 Sep 2015 09:06 AM

மாற்றுப் பாதையிலாவது சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு வலியுறுத்தல்

மாற்றுப் பாதையிலாவது சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றி தமிழர்களின் 150 ஆண்டு கால கனவை நனவாக்க வேண்டும் என திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய கப்பல் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.

‘ராமர் பாலத்துக்கு எந்த சேதமும் இல்லாமல் மாற்றுப் பாதையில் சேது சமுத்திரத் திட்டம் செயல்படுத் தப்படும். இதற்கான அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி விரைவில் வெளியிடுவார்’ என மத்திய கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சேது சமுத் திரத் திட்டப் பணிகள் தொடங் கியபோது கப்பல் துறை அமைச்ச ராக இருந்த டி.ஆர்.பாலு ‘தி இந்து’ வுக்கு அளித்த சிறப்புப் பேட்டி:

சேது சமுத்திரத் திட்டத்தின் தற்போதைய நிலை என்ன?

ரூ.2,427 கோடியிலான சேது சமுத்திரத் திட்டப் பணிகளை 2-7-2005-ல் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகி யோர் தொடங்கி வைத்தனர். மன்னார் வளைகுடா பகுதியில் கடலை ஆழப்படுத்தும் இத்திட்டம் 300 மீட்டர் அகலமும், 167 கி.மீ. நீளமும், 12 மீட்டர் ஆழமும் கொண் டது. திட்டத்தின் பெரும்பகுதி பணிகள் முடிந்துள்ளன. இன்னும் 23 கி.மீ. அளவுக்கே கல்வாய் தோண்ட வேண்டியுள்ளது. சுமார் ரூ.1,000 கோடி வரை செலவான நிலையில் ராமர் பாலத்தை காரணம் காட்டி இத்திட்டத்தை முடக்கிவிட்டனர்.

பெரும் பகுதி பணிகள் முடிந்துள் ளது என்றால், ராமர் பாலத்துக்கு சேதம் ஏற்பட்டிருக்கும் அல்லவா?

ராமர் பாலம் என்று மதவாதி கள் அழைக்கும் மணல் திட்டுகள் வழியாகவும் பணிகள் நடைபெற் றுள்ளன. ராமர் பாலம் வழியாக சேது சமுத்திரத் திட்டத்தை செயல் படுத்த வாஜ்பாய் ஆட்சியில்தான் முடிவு எடுக்கப்பட்டது. இத்திட்டத் துக்காக பல்வேறு வழிகள் ஆராயப் பட்டன. கோதண்டராமர் கோயில், பவளப்பாறைகள், கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், கடைசியாக இந்தப் பாதையை வாஜ்பாய் அரசு இறுதி செய்தது. இதற்கான கோப்புகளில் அன்றைய மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, சு.திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.

இதுவரை தோண்டப்பட்ட கால் வாய்கள் பயன்படுத்தும் நிலையில் இருக்குமா?

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆய்வு செய்தபோது கால்வாய் களின் பெரும்பகுதி பயன்படுத்தும் நிலையில் இருப்பது கண்டறியப் பட்டது. கால்வாய்கள் சேதமடைய வாய்ப்புகள் மிகவும் குறைவு. எங்களுக்கு 6 மாத கால அவகாசம் கிடைத்திருந்தால் கடலில் கால்வாய் அமைக்கும் உலகின் முதல் திட்டத்தை நிறைவு செய்து வரலாறு படைத்திருப்போம்.

ராமர் பாலத்துக்கு சேதம் இல்லாத வகையில் மாற்றுப் பாதையில் இத்திட் டம் செயல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளாரே?

சேது சமுத்திரத் திட்டம் என்பது தமிழர்களின் 150 ஆண்டு கால கனவுத் திட்டம். அண்ணா வலியுறுத் திய திட்டம். ‘ராமர் பாலத்தை சேதப்படுத்துவது எங்கள் நோக்கமல்ல. எப்படியாவது சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதே தமிழர்களின் விருப்பம்’ என திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். எனவே, நிதின் கட்கரியின் அறிவிப்பை வரவேற்கிறேன். மாற்றுப் பாதையிலாவது இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது எங்களது கோரிக்கை.

மாற்றுப் பாதையை தேர்வு செய்தால் இதுவரை செலவான ரூ.1,000 கோடி வீண்தானா? ஏற் கெனவே தோண்டப்பட்ட கால் வாயை பயன்படுத்திக் கொள்ள முடியுமா?

இதுவரை தோண்டப்பட்ட கால் வாயை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் மாற்றுப் பாதையை தேர்வு செய்ய வேண்டும். சில இடங்களில் மட்டும் இத்திட்டம் மாறுபடும். எனவே, ரூ.1,000 கோடி வீண் என்று சொல்ல முடியாது. ஆனால், இத்திட்டம் முழுமை அடைய வேண்டுமானால் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட ரூ.2,427 கோடியைவிட பல மடங்கு அதிக செலவாகும்.

இவ்வாறு டி.ஆர்.பாலு கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x