

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 18-வது வார்டில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இப்பகுதியில் வசிக்கும் மக்களின் பொழுதுபோக்கு பயன்பாட்டுக்காக, அம்ருத் திட்டத்தின்கீழ், கடந்த 2016-17-ம் ஆண்டில் ரூ.63 லட்சம் செலவில் பூங்கா அமைக்கப்பட்டது.
இப்பூங்காவில் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காக நடைபாதை, சிறுவர்கள் விளையாடுவதற்காக சறுக்கு ஏணி, சீசா, ஊஞ்சல்கள் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இப்பூங்காவில் காலை, மாலை வேளைகளில் நடைப்பயிற்சி மேற்கொள்ள ஏராளமான ஆண்களும், பெண்களும், விளையாடுவதற்காக குழந்தைகளும் வந்து செல்வர். இந்நிலையில், கடந்த மார்ச் மாதத்தில் கரோனா அச்சத்தால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, இப்பூங்கா மூடப்பட்டது.
தற்போது சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து பூங்காக்களை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், இப்பூங்கா இதுவரை திறக்கப்படவில்லை. மேலும், பூங்காவில் பராமரிப்புப் பணிகள் முறையாக நடைபெறாததால், அங்குள்ள விளையாட்டு சாதனங்கள் துருப்பிடித்து பாழாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன், பூங்கா முழுவதும் புதர்மண்டி காட்சி அளிக்கிறது. எனவே, இப்பூங்காவை உடனடியாக திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, ஆவடி மாநகராட்சி ஆணையர் கூறும்போது, “ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 21 பூங்காக்கள் மூடப்பட்டன. தற்போது, பூங்காக்களில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்துப் பூங்காக்களும் திறக்கப்படும்” என்றார்.ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் மூடப்பட்ட நிலையிலேயே உள்ள பூங்கா.