Published : 11 Oct 2020 07:36 AM
Last Updated : 11 Oct 2020 07:36 AM

புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம்: நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபாடு

புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று பெருமாள் கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இம்மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் மிகவும் விசேஷமானவை அன்றைய தினம் பக்தர்கள் பெருமாள் கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்வது வழக்கம். இதன் அடிப்படையில் புரட்டாசி மாதத்தின் கடந்த 3 வார சனிக்கிழமைகளிலும் பெருமாள் கோயில்களில் அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.

புரட்டாசி மாதம், வரும் 16-ம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே, இம்மாதத்தின் கடைசி சனிக்கிழமையான நேற்று திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின்கீழ் செயல்படும் சென்னை தியாகராய நகரில் உள்ள வெங்கடேச பெருமாள் கோயிலுக்கு அதிகாலை முதலே பக்தர்கள் குடும்பத்துடன் வரத் தொடங்கினர். காலை 6 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’, ‘நாராயணா’ என்று தொடர்ந்து பெருமாள் நாமம் சொல்லி தரிசனம் செய்தனர். நேற்று நாள் முழுவதும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்தனர்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் பக்தர்கள் காலை 7 மணி முதல் அனுமதிக்கப்பட்டனர். நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்தனர். நேற்று நாள் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

100 கிலோ பாதாம், முந்திரி மாலை

திருவொற்றியூர் கல்யாண வரதராஜ பொருமாள் கோயிலில் 100 கிலோ எடையில் பாதாம், முந்திரி, பிஸ்தா உள்ளிட்ட 13 வகையான உலர் பழங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மாலை சுவாமிக்கு அணிவிக்கப்பட்டிருந்தது. நேற்று காலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட பெருமாளை தரிசனம் செய்தனர். இவ்வாறு, புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையான நேற்று சென்னை முழுவதும் பல்வேறு பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x