Last Updated : 11 Oct, 2020 06:54 AM

 

Published : 11 Oct 2020 06:54 AM
Last Updated : 11 Oct 2020 06:54 AM

அதிமுக முதல்வர் வேட்பாளரை ஏற்க கூட்டணியில் தயக்கமா?- கே.பி.முனுசாமி கருத்தால் கூட்டணி கட்சிகள் மத்தியில் சலசலப்பு

நாங்கள் அறிவித்த முதல்வர் வேட்பாளரை ஏற்பவர்கள்தான் எங்களுடன் கூட்டணியில் இருக்க முடியும் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்திருப்பது கூட்டணி கட்சிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதல்வர் பழனிசாமியை முன்னிறுத்துவதாக ஓபிஎஸ் கடந்த 7-ம் தேதி அறிவித்தார். இரு தரப்பும் சமாதானம் அடைந்துள்ளதால், அதிமுகவினர் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இந்த சூழலில், கூட்டணி கட்சியான பாஜகவில் நிலவிவரும் கருத்துகள், அக்கட்சியினரின் செயல்பாடுகள் ஆகியவை குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. சில நாட்களுக்கு முன்பு, அதிமுக உடனான கூட்டணி நீடிப்பதாக பாஜக மாநில தலைவர் முருகன் கூறிய நிலையில், நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ‘‘அதிமுகவுடன் மக்களவை தேர்தலுக்காக கூட்டணி அமைக்கப்பட்டது. சட்டப்பேரவை தேர்தலுக்காக அதிமுக அல்லது திமுக உடனோ, பாஜக தலைமையிலோ கூட்டணி அமையலாம்’’ என்றார்.

இதற்கிடையில், முதல்வர் பழனிசாமியை பாஜக மாநில தலைவர் முருகன் நேற்று முன்தினம் சந்தித்தார். பின்னர், அதிமுக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்ததாக செய்தியாளர்களிடம் அவர் கூறினார். ‘‘அவர் அதிமுகவின் முதல்வர் வேட்பாளரா, அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளரா?’’ என்று செய்தியாளர் கேட்டதற்கு, ‘‘தெளிவாக சொல்லிவிட்டேனே’’ என்று மட்டும் கூறினார்.

முன்னதாக, இன்னொரு கூட்டணி கட்சியான தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா, ‘‘விஜயகாந்த் ‘கிங்’ ஆக இருக்க வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகின்றனர்’’ என்று தெரிவித்தார். முதல்வர் வேட்பாளராக பழனிசாமி அறிவிக்கப்பட்டபோது, விஜயகாந்த், பிரேமலதா இருவரும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தனர். வீடு திரும்பிவிட்ட நிலையிலும்கூட முதல்வருக்கு அவர்கள் இதுவரை வாழ்த்து தெரிவிக்கவில்லை.

கூட்டணி கட்சியான பாமக தலைவர் ராமதாஸ், முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்தாலும், ‘நேற்றைய பொழுது நிஜமில்லை, நாளைய பொழுது நிச்சயமில்லை’ என்று ட்விட்டரில் ஒரு பதிவை போட்டு, அது சர்ச்சையானதும், ‘ட்விட்டர் பதிவில் உள்நோக்கம் இல்லை’ என்று பாமக தெரிவித்தது.

கூட்டணி கட்சியினரின் இத்தகைய கருத்துகள், செயல்பாடுகள் ஆகியவை அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை ஏற்க அவர்கள் தயங்குகின்றனரா என்ற கேள்வியை எழுப்பியது.

இந்நிலையில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி நேற்று கூறும்போது, ‘‘தேசியக் கட்சியோ, மாநிலக் கட்சியோ, எங்களுடன் கூட்டணிக்கு வரும்போது, நாங்கள் அறிவித்த முதல்வர் வேட்பாளரை ஏற்பவர்கள்தான் எங்களுடன் கூட்டணியில் இருக்க முடியும்’’ என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிமுக நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘‘சட்டப்பேரவை தேர்தலில், அதிமுகதான் பெரும்பான்மை இடங்களில் போட்டியிடும். அதிமுக தலைமையில் கூட்டணி அமைவதால், முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ளோம். எனவே, அதை ஏற்பவர்கள்தான் அதிமுக கூட்டணியில் இடம்பெற முடியும். இதைத்தான் அவரும் தெரிவித்துள்ளார்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x