

அரசியல் எதிரிகளின் சதிச் செயல்கள் வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் அரங்கேறாத அள விற்கு விழிப்புடன் இருக்க வேண்டும் என, அதிமுகவினருக்கு முதல்வரும் கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
2016 ஜனவரி 1-ம் தேதியை தகுதிப்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல்கள் சுருக்கமுறை திருத்தம் செய்யும் பணிகள் நடக்கின்றன. இதில், செப்டம்பர் 15-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளி யிடப்படுகிறது. அன்று முதல் அக்டோபர் 10-ம் தேதி வரை பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தல் மனுக்கான கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 20 மற்றும் அக்டோபர் 4-ம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடக்கின்றன. இறுதி வாக்காளர் பட்டியல் 2016 ஜனவரி 11ம் தேதி வெளியிடப்படுகிறது.
இந்த பணியில் அதிமுகவின் பல்வேறு பிரிவுகளின் நிர்வாகிகள் மற்றும் அந்தந்த வாக்குச் சாவடிகளுக்காக நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர்களும் தனிக் கவனம் செலுத்த வேண்டும். 2016 ஜனவரி 1ம் தேதி அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள், பட்டியலில் இதுவரை இடம் பெறாதவர்கள், புதிதாக குடிவந்தவர்கள் பெயர்களை பட்டியலில் சேர்க்கவும், வெளியூர் களுக்கு இடம் பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள் பெயரை நீக்கவும், தவறுகளை திருத்தவும், தேவை யான படிவங்களை பெற்று பூர்த்தி செய்து, முகாம்களில் வழங்கி இப்பணியை முழுமையாக செய்து முடிக்க வேண்டும். விவரங்களை மாவட்ட செயலாளர்கள் மூலம் தலைமைக்கு தெரிவிக்க வேண்டும்.
விழிப்புடன் இருக்க வேண்டும்
தேர்தல் வெற்றிக்கு நேர்மை யான முழுமையான வாக்காளர் பட்டியல் மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
நமது அரசியல் எதிரிக ளின் சதிச் செயல்கள் வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் அரங்கேறாத அளவிற்கு ஒவ்வொருவரும் விழிப்புடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் ஜெய லலிதா தெரிவித்துள்ளார்.