

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டு 125 ஆண்டுகள் ஆன நிலையில் இன்று விவசாயிகள் பென்னிகுவிக் நினைவாக பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டனர்.
தேனி திண்டுக்கல் மதுரை சிவகங்கை ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களின் வாழ்வாதாரமாக முல்லைப் பெரியாறு அணை விளங்குகிறது.
ஆங்கிலேய பொறியாளர் கர்னல் பென்னிகுவிக் இந்த அணையைக் கட்டி முடித்து,1895-ம் ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. 125 ஆண்டுகள் ஆன நிலையில் இன்று (சனி) தேனி மாவட்ட விவசாயிகள் பென்னிகுவிக் நினைவாக பல்வேறு வழிபாடுகளை மேற்கொண்டனர்.
லோயர்கேம்ப்பில் உள்ள அவரது மணிமண்டபத்தில் ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் பொங்கல் வைக்கப்பட்டது. தலைவர் எஸ்.ஆர்.தேவர் தலைமை வகித்தார். பாடகர் சமர்ப்பா குமரன் பென்னிகுவிக்கின் சிறப்புகள் குறித்த பாடல்களை பாடினார்.தொடர்ந்து அவரது சிலைக்கு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது.
குருவனூத்து பாலத்தில் சிறப்பு பூஜை செய்து ஆற்றில் மலர் தூவப்பட்டது. பகவதியம்மன் கோயிலில் கிடா வெட்டி பழங்குடியின மக்களான முதுவான்கள் அணைக்காக உயிர்நீத்தவர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடுகளை நடத்தினர்.
பொதுச் செயலாளர் பொன்காட்சிக்கண்ணன், ஒருங்கிணைப்பாளர் அன்வர், பொருளாளர் லோகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை விமானநிலையத்திற்கு பென்னிகுவிக் பெயர் வைக்க வேண்டும். பள்ளி பாடப்புத்தகங்களில் இவர் குறித்த விபரங்கள் இடம் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர்.
உத்தமபாளையம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உள்ள பென்னிகுவிக் சிலைக்கு 18-ம் கால்வாய் விவசாயிகள் சங்கம் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது.
தலைவர் ராமராஜ், செயலாளர் திருப்பதிவாசகன், துணைத் தலைவர் பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதே போல் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் விவசாயிகள் சார்பில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.