

அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக முதல்வர் பழனிசாமி அறிவிக்கப்பட்ட நிலையில் மதுரையில் அதிமுகவினர் சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டனர்.
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மீண்டும் திருமங்கலத்திலேயே போட்டியிடுவதால் அந்தத் தொகுதியில் கட்சியினர் அவருக்கு ஆதரவாக சுவர் விளம்பரம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதிமுகவில் கடந்த வாரம் வரை, முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை நிலவியது. தற்போது அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக முதல்வர் கே.பழனிசாமியை ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்ததால் முதல்வர் வேட்பாளர் சர்ச்சை முடிவுக்கு வந்தது.
ஏற்கெனவே, அதிமுக மாவட்ட செயலாளர்கள், உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி நியமனம் உள்ளிட்டப்பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
தற்போது உட்கட்சி குழப்பம் முடிவுக்கு வந்தநிலையில் அதிமுகவினர், சட்டசபை தேர்தல் பணிகளை தற்போதே தொடங்கிவிட்டனர். மதுரை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.
இதில், கடந்த சட்டசபை தேர்தலில் 8 தொகுதிகளில் அதிமுகவும், 2 தொகுதிகளில் திமுகவும் வெற்றிப்பெற்றது. ஆனால், அதிமுக வெற்றிப்பெற்ற திருப்பரங்குன்றம் தொகுதி வேட்பாளர் எஸ்.எம்.சீனிவேல், வெற்றிப்பெற்றது கூட தெரியாமல் வாக்கு எண்ணிக்கை நடந்த அன்றே இறந்துவிட்டார்.
அதன்பிறகு நடந்த இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். ஆனால், அவரும் உடல்நலகுறைவால் இறந்துவிட மீண்டும் நடந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் வெற்றிப்பெற்றார். தற்போது அதிமுக 7 எம்எல்ஏக்களையும், திமுக 3 எம்எல்ஏக்களையும் வைத்துள்ளனர்.
இந்த முறை, அதிமுகவை பொறுத்தவரையில் திருப்பரங்குன்றம், தற்போது கைவசம் உள்ள 7 எம்எல்ஏ- தொகுதிகளையும் சேர்த்து 8 தொகுதிகளிலும் மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளதாக அக்கட்சியினர் கூறுகின்றனர்.
இதில், வடக்கு தொகுதி எம்எல்ஏவும், புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளருமான வி.வி.ராஜன் செல்லப்பா, தொகுதி மாறி இந்த முறை திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.
அதுபோல், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூம், தொகுதி மாறி தெற்கு தொகுதியில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், திருமங்கலம் தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான ஆர்பி.உதயகுமார் மீண்டும் அதே தொகுதியிலேயே போட்டியிட உள்ளார்.
அவர், அதற்காகவே பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், நிவாரண உதவிகளையும் திருமங்கலம் தொகுதியில் வாரி இறைத்துள்ளார்.
மேலும், வாரந்தோறும் தொகுதியில் முகாமிட்டு ஒவ்வொரு ஒன்றியம் வாரியாக உறுப்பினர் சேர்க்கை, ஆலோசனைக்கூட்டங்களை நடத்தி கட்சியினரை உற்சாகப்படுத்தி வருகிறார்.
தற்போது உள்கட்சி பிரச்சனை முடிவுக்கு வந்தநிலையில் ஆர்.பி.உதயகுமார் ஆதரவாளர்கள், அவருக்காக திருமங்கலம் தொகுதியில், தற்போதே சட்டசபை தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டனர்.
அவர்கள், ஆர்பி.உதயகுமாருக்கும், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் கே.பழனிச்சாமி பெயர்களை குறிப்பிட்டு திருமங்கலம் தொகுதிக்கப்பட்ட பகுதிகளில் சுவர் விளம்பரம் செய்து வருகின்றனர்.
அதுபோல், மாநகர மாவட்ட செயலாளர் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் விவி.ராஜன் செல்லப்பா ஆகியோரும், ஒன்றியம் வாரியாக நிர்வாகிகள் கூட்டம், போட்டு தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டனர்.
பாஜகவினரும், மத்திய மத்திய தொகுதி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட தாங்கள் விரும்பும் தொகுதிகளில் சுவர் விளம்பரம் செய்து தேர்தல்பணிகளை தொடங்கிவிட்டனர்.
ஆனால், திமுகவினரோ இன்னும் தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டாமல் கட்சி மேலிடம் உத்தரவுக்காக காத்திருக்கின்றனர்.
தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், பாமக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட மற்ற கட்சிகளோ, கூட்டணியில் எந்தத் தொகுதி கிடைக்கிறதோ? இல்லையோ? என்பது தெரியாததால் அமைதியாக உள்ளனர்.