தவறான அறிக்கைகளை தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடித்த சுகாதார இயக்குனர்களுக்கு அபராதம்: உயர் நீதிமன்றம் அதிரடி

தவறான அறிக்கைகளை தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடித்த சுகாதார இயக்குனர்களுக்கு அபராதம்: உயர் நீதிமன்றம் அதிரடி
Updated on
1 min read

தவறான அறிக்கைகளை தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக தமிழக பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறையின் தற்போதைய இயக்குனருக்கும், முந்தைய இயக்குனருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 33 மருத்துவ அலுவலர்கள் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி 2014-ல் அறிவிப்பு வெளியிட்டது. திண்டுக்கல் வடமதுரையைச் சேர்ந்த டாக்டர் தினேஷ்குமார் விண்ணப்பித்தார். அவரது பெயர் எம்பிசி/டிசி பிரிவு காத்திருப்போர் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது.

அதே பிரிவில் பணி நியமனம் பெற்ற டாக்டர் வினோத் என்பவர் பணியிலிருந்து ராஜினாமா செய்ததால் அந்த காலியிடத்தில் காத்திருப்போர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள தன்னை நியமிக்கக்கோரி தினேஷ்குமார் மனு அளித்தார். ஆனால் அந்த காலியிடத்தை டிஎன்பிஎஸ்சியிடம் ஒப்படைத்துவிட்டதாக அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதை ரத்து செய்து தனக்கு பணி வழங்க உத்தரவிடக்கோரி தினேஷ்குமார் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்து நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரரின் பெயர் காத்திருப்போர் பட்டியலில் முதலிடத்தில் இருந்துள்ளது. ஆனால் தற்போது காத்திருப்போர் பட்டியலில் மனுதாரர் பெயர் இடம் பெறவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் அனைத்து ஆவணங்களையும் பரிசீலனை செய்த போது மனுதாரரின் பெயர் காத்திருப்போர் பட்டியலில் இருப்பதும், அது தொடர்பாக டிஎன்பிஎஸ்சியே மனுதாரருக்கு தகவல் தெரிவித்ததும் உறுதியாகியுள்ளது.

பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து இயக்குனரின் நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. சுகாதாரத்துறையிடம் டிஎன்பிஎஸ்சி 4 வாரத்தில் காத்திருப்போர் பட்டியலை வழங்க வேண்டும். அதன் பின்னர் மனுதாரரை 2 வாரத்தில் காலியிடத்தில் நியமிக்க வேண்டும்.
இந்த விவாகரம் தொடர்பாக இணைச் செயலர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியை கொண்டு விசாரித்து, பொது சுகாதாரம் தடுப்பு மருந்து துறை இயக்குனர் மீது சட்டப்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்த துறையின் தற்போதை இயக்குனர் டி.எஸ்.செல்வவிநாயகம், முந்தைய இயக்குனர் கே.குழந்தைசாமி ஆகியோருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இப்பணத்தை கரோனா நிவாரணத்துக்காக உயர் நீதிமன்ற மதுரை பதிவாளரிடம் 2 வாரத்தில் வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in