Published : 10 Oct 2020 03:48 PM
Last Updated : 10 Oct 2020 03:48 PM

மீனாட்சியம்மன் கோயிலில் மழைநீர் புகாமல் இருக்க பாண்டிய மன்னர்களின் கால வடிகால்முறை செயல்படுத்த திட்டம்: அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்

மதுரை

மீனாட்சியம்மன் கோயிலில் மழைநீர் புகாமல் இருக்க பாண்டிய மன்னர்கள் கால மழைநீர் வடிகால் முறை செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டு்ளளது, என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.8.57 கோடி மதிப்பீட்டில் மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி நான்கு சித்திரை வீதிகளில் நடைபெற்று வரும் பணிகளை, இன்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆய்வு செய்தார்.

நான்கு சித்திரை வீதிகளில் கருங்கற்கள் பதிக்கும் பணிகள், மழைநீர் உறிஞ்சு தொட்டிகள் அமைக்கும் பணிகள் மற்றும் அலங்கார விளக்குகள் அமைக்கும் பணிகளை பார்வையிட்டார். அவருடன் மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகன், பொறியாளர் அரசு மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.

அதன்பின் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியார்களிடம் கூறியதாவது:

மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 8 பணிகள் ரூ.977 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகின்றன. இப்பணிகள் ஒவ்வொரு வாரமும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

பெரியார் பேருந்து நிலையம் விரிவாக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும். அதன் அருகில் சுற்றுலா தகவல் மையம் கட்டுமான பணிகளும், நவீன அங்காடி மையமும் ஏற்கனவே ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பணிகள் நடைபெறுகிறது.

வைகை ஆற்றங்கரையினை மேம்படுத்துவதற்காக கரையின் இருபுறங்களில் இருவழிச் சாலையாக மாற்றும் பணிகளும், வைகை ஆற்றின் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கும் வகையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது. மழைநீர் மீனாட்சியம்மன் கோயிலுக்குள் செல்லாத அளவிற்கு 30 மீட்டர் மழைநீர் உறிஞ்சு தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மழைநீர் சீராக நேரடியாக வைகை ஆற்றில் செல்லும் அளவிற்கு பாண்டியர் மன்னர்கள் காலத்தில் இருந்த மழைநீர் வடிகால் முறை தற்போது செயல்படுத்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதனால் சித்திரை வீதிகளில் மழைநீர் தேங்குவது தடுக்கப்படும். இந்தியாவிலேயே தூய்மையான ஆலயமாக அருள்மிகு மீனாட்சி சுந்தரரேஸ்வரர் ஆலயம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தக்க வைக்கவே ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x