Published : 10 Oct 2020 04:43 PM
Last Updated : 10 Oct 2020 04:43 PM

திண்டுக்கல் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; குற்றம் இழைத்தோருக்கு உரிய தண்டனை பெற்றுத் தருவதை உறுதி செய்க: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

கே.பாலகிருஷ்ணன்: கோப்புப்படம்

சென்னை

திண்டுக்கல் மாவட்டத்தில் 12 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், உரிய தண்டனை பெற்றுத் தர தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று (அக். 10) வெளியிட்ட அறிக்கை:

"திண்டுக்கல் மாவட்டம் குரும்பட்டியைச் சேர்ந்த முடிதிருத்தும் சமூகத்தைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமி, பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தப் படுகொலையைக் கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் திண்டுக்கல்லில் போராட்டம் நடத்தப்பட்டதுடன் அதிகாரிகளிடம் முறையிட்ட அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

12 வயதுச் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, மின்சாரம் பாய்ச்சி படுகொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளியை போதிய ஆதாரம் இல்லை என்று கூறி நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

35 சாட்சிகள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டதில் ஒருவர், சம்பந்தப்பட்ட குற்றவாளி அந்தச் சிறுமியின் வீட்டிலிருந்து வெளியே வந்ததைப் பார்த்ததாகவும் சாட்சியாகச் சொல்லியுள்ளார். இதன் பிறகும் நீதிமன்றம் அவரை நிரபராதி என்று விடுதலை செய்திருப்பது அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உள்ளாக்குகிறது.

எனவே, இந்த வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து குற்றம் இழைத்தோருக்கு உரிய தண்டனை பெற்றுத் தருவதை உறுதி செய்திட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வற்புறுத்துகிறது".

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x