

தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பாதுகாப்பாக அதிமுக ஆட்சி இருக்கிறது என அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியிருக்கிறார்.
கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் நடிகர்கள் மட்டுமல்ல மக்கள் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர்கள். எம்ஜிஆர் தனது படங்களின் மூலமாக கருத்துக்களைச் சொல்லி திமுகவை வளர்த்தவர்.
இருவரும் அரசியல் பாரம்பரியம் கொண்டவர்கள். திரைப்படத்தில் இருந்த நேரத்தில் கூட சமுதாயப் பணியில் ஆர்வம் காட்டியவர்கள். திரைப்படத்தின் புகழால் மட்டும் அவர்கள் வந்துவிடவில்லை. பேரறிஞர் அண்ணாவே எம்ஜிஆரைப் பார்த்து என் இதயக்கனி என்று கூறியுள்ளார்.
அதேபோல் இன்று உள்ள முதல்வரும், துணை முதல்வரும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரிடம் பாடம் பயின்றவர்கள். 2016 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற 6 மாதங்களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமானார்.
தேர்தல் அறிக்கையில் அவர் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் முதல்வராக எடப்பாடி கே.பழனிச்சாமி உள்ளார். இன்றைக்கு அவரை முதல்வராக, தலைவராகத்தான் மக்கள் பார்க்கிறார்கள். அந்த இடத்தில் வேறு யாரையும் வைத்துப் பார்க்க மக்கள் தயாராக இல்லை. எனவே வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்.
திரைப்படத் துறையைப் பொருத்தவரை பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. தற்போது திரையரங்குகளை திறப்பதற்கு மத்திய அரசு வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக முதல்வர் துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்து வருகிறார். விரைவில் முதல்வர் நல்ல முடிவை அறிவிப்பார்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அதிமுக ஆட்சிதான் பாதுகாப்பாக இருந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.