

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள தெற்கு திட்டை ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவரைத் தரையில் உட்கார வைத்த விவகாரத்தில் ஊராட்சி செயலாளர், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மீது காவல் துறையினர் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
புவனகிரி அருகே தெற்கு திட்டை ஊராட்சி உள்ளது. இதன் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி (37). இவர் ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர். இந்த ஊராட்சியில் 6 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரியைச் செயல்படவிடாமல் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மோகன்ராஜ் உள்ளிட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் செயல்பட்டு வருகின்றனர் என்று கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 17-ம் தேதி நடைபெற்ற ஊராட்சி மன்றக் கூட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி தரையில் அமர வைக்கப்பட்ட புகைப்படம் நேற்று (அக். 9) இரவு சமூக வலைதளங்களில் பரவியது.
இதனைத் தொடர்ந்து இன்று (அக். 10) காலை ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி, "நான் ஆதி திராவிடர் சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மோகன்ராஜ், ஊராட்சி செயலாளர் சிந்துஜா ஆகியோர் தொடர்து அவமானப்படுத்தி வருகின்றனர். தரையில் உட்கார வைக்கின்றனர். கடந்த சுதந்திர தினந்தன்று கூட தேசியக் கொடி ஏற்றவிடவில்லை. என்னை ஊராட்சி பணி செய்யவிடாமல் தடுத்து வருகின்றனர்" என்று புவனகிரி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதனையடுத்து, காவல் துறையினர் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மோகன்ராஜ், ஊராட்சி செயலாளர் சிந்துஜா ஆகியோர் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை புவனகிரி அடுத்த தெற்கு திட்டை கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கூடுதல் ஆட்சியர் ராஜகோபால் சுங்காரா ,சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன் ஆகியோர், ஊராட்சி மன்றப் பதிவேடுகளைப் பார்வையிட்டு புவனகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேமா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழ்ச்செல்வி, ஊராட்சி செயலாளர் சிந்துஜா ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில் ஊராட்சி செயலாளர் சிந்துஜா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மோகன்ராஜ் கூறுகையில், "ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் சரவணகுமார் ஊராட்சிப் பணிகளில் தலையிடுவது, ஊராட்சிக் கூட்டங்களில் கலந்துகொள்வது போன்ற செயலில் ஈடுபட்டார். நான் அதனைக் கண்டித்தேன். அதனால் என் மீது வேண்டும் என்றே திட்டுமிட்டு ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரியை விட்டு காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வைத்துள்ளார். அதிகாரிகள் விரிவான விசாணை நடத்தினால் உண்மை வெளியில் வரும்" என்றார்.
இந்தப் பிரச்சினை புவனகிரி வட்டத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.