

கரோனா தொற்று பரவலால் பெட்ஷீட், கர்சீப் உள்ளிட்டவை விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளதால், தொழிலை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விசைத்தறி தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
நாமக்கல் அருகே கொண்டம்பட்டி கிராமத்தில் விசைத்தறி தொழில் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. இங்கு பெட்ஷீட், கர்சீப் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை கரூர் மாவட்டத்திற்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. தவிர, உள்ளூரிலும் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில் கரோனா தொற்று காரணமாக கடந்த சில மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பெட்ஷீட், கர்சீப் ஆகியவை வாங்க ஆளின்றி தேக்கமடைந்துள்ளது. இதுகுறித்து கொண்டம்பட்டியைச் சேர்ந்த விசைத்தறி உரிமையாளர் கே. செல்வக்குமார் கூறியதாவது:
கொண்டம்பட்டி பகுதியில் பல தலைமுறைகளாக கைத்தறி, விசைத்தறி தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். இங்கு பெரும்பாலும் பெட்ஷீட், கர்சீப் தயாரிக்கப்படுகிறது. இவை கரூர் மாவட்டத்திற்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
விற்பனையாளர்கள் ஆர்டரின் பேரில் தயாரித்து வழங்குகிறோம். தீபாவளி பண்டிகை சமயத்தில் வேலை அதிகமாக இருக்கும். ஆனால், இந்தாண்டு இதற்கு நேர்மாறாக உள்ளது. கரோனா காரணமாக கடந்த சில மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்தது. அதனால், அப்போது உற்பத்தி செய்யப்பட்ட பெட்ஷீட், கர்சீப் உள்ளிட்டவை விற்பனை செய்ய இயலாமல் தேக்கமடைந்தது.
தற்போது தளர்வுகள் அளித்த நிலையிலும் அதே சூழல் தான் நிலவி வருகிறது. உற்பத்தி செய்து வழங்குவதற்கான கூலித் தொகை மீட்டருக்கு ரூ. 10 வழங்கப்பட்டு வந்தது. தற்போது மீட்டருக்கு ரூ. 8 மட்டுமே வழங்கப்படுகிறது. அதேபோல் மாதம் ஒன்றுக்கு 4 ஆயிரம் மீட்டர் வீதம் பெட்ஷீட் உள்ளிட்டவை உற்பத்தி செய்யப்படும். தற்போது பாதியாக குறைந்துள்ளது. இந்நிலை நீடித்தால் பலர் தொழிலை கைவிடும் நிலைக்கு தள்ளப்படுவர். இதனை அரசு கவனத்தில் கொண்டு நிலைமை சீரடைய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.நாமக்கல் அருகே கொண்டம்பட்டி கிராமத்தில் விசைத்தறிக் கூடத்தில் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளி.