

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு, பராமரிப்பு தொடர்பாக முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்து அதன் பாதுகாப்பை உறுதி செய்ய அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவால் ஏற்படுத்தப்பட்ட துணைக்குழுவைக் கலைக்கக் கோரி கேரள மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் ஜோசப், ஷீலா கிருஷ்ணன்குட்டி, ஜெஸ்ஸிமோள் ஜோஸ் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த வழக்கில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
தமிழக அரசு அளித்த பதில் மனுவில், “முல்லைப் பெரியாறு துணைக்குழுவைக் கலைக்க வேண்டிய அவசியமில்லை. பிரதான குழு இந்த விவகாரத்தில் எடுக்கும் அனைத்து முடிவுகளின் அடிப்படையில்தான் துணைக்குழு முறையாகச் செயல்படுகிறது. அதனால் முல்லைப் பெரியாறு அணைக் குழுவைக் கலைக்க வேண்டாம்.
உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையில்தான் பிரதான குழுவும் செயல்பட்டு வருகிறது. முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது. நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களைத் தாங்கும் வகையில் பலமாகவுள்ளது. அணையின் பாதுகாப்பை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மேற்பார்வைக் குழு கண்காணித்து வருகிறது.
மேற்பார்வைக் குழு தனது பணியை முழுமையாக துணைக்குழுவிடம் ஒப்படைத்துள்ளது என்ற குற்றச்சாட்டை ஏற்க முடியாது. ஏனெனில் துணைக்குழு ஒரு உதவிக்காகவே அமைக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது என மத்திய நீர் ஆணையம் ஏற்கெனவே தெரிவித்தது. ஏனெனில் அணை எத்தனை ஆண்டுகள் பழமையானது என பார்க்கக்கூடாது, ஏனெனில் அது முறையாக பராமரிக்கப்படும் வரை அணை பலமாக இருக்கும். முல்லைப் பெரியாறு அணையை விடப் பழமையான அணைகள் உலகின் பல நாடுகளில் செயல்பாட்டில் உள்ளன.
கேரள வெள்ளப்பெருக்கின்போது அணை திடீரென முன்னறிவிப்பு இன்றி திறக்கப்பட்டதாகக் கூறுவது தவறு. நீர் அரை அடி அதிகரிக்கும்போதெல்லாம் உரிய தகவல் தெரிவிக்கப்பட்டது. நீர் திறப்பு அதிகரிக்கும்போதும் தகவல் பரிமாறப்பட்டது.
கேரளாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 131 அடியாகவே இருந்தது'' எனத் தெரிவித்துள்ளது.