சமூக விரோதிகளின் கூடாரமாகும் ராக்காச்சியம்மன் கோயில் வனப்பகுதி

சமூக விரோதிகளின் கூடாரமாகும் ராக்காச்சியம்மன் கோயில் வனப்பகுதி
Updated on
1 min read

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ராக்காச்சியம்மன் கோயில் வனப்பகுதி சமூக விரோதிகளால் மது பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள், நிறைந்த குப்பை மேடாக மாறி வருகிறது.

விருதுநகர்-மதுரை மாவட்ட பகுதியில் உள்ள மேற்குத் தொடா்ச்சி மலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் சாம்பல் நிற அணில்கள் வன உயிரினச் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு பல அரியவகை தாவரங்களும் 32 வகையான பாலூட்டிகளும், 247 பறவையினங்களும் உள்ளன.

ஸ்ரீவில்லிபுத்தூர் சாம்பல் நிற அணில் வன உயிரினச் சரணாலயம் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உயிர் பன்மைப் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. ஆனால், அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதி யான ராக்காச்சியம்மன் கோயில் வனப்பகுதி சமூக விரோதிகளின் கூடாரமாகி வருகிறது.

இந்த வனப்பகுதியில் தனியார் பண்ணைகள், தோட்டங்கள் உள்ளன. அதோடு இப்பகுதியில் ராக் காச்சியம்மன் கோயிலும் உள்ளது. இங்கு விடுமுறை நாட்களில் ஏராள மானோர் சுற்றுலா வருகின்றனர். ஆனால், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இப்பகுதியில் பிளாஸ்டிக் பொருள்களை கொண்டு செல்லத் தடை இருந்தாலும், இந்த வனப்பகுதியில் பல இடங்களில் மதுபாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகள் குவிந்து கிடக்கின்றன. சுற்றுலா வரும் சிலர் காட்டாற்றில் குளிக்கின்றனர். மேலும் வனப்பகுதிக்குள் மது அருந்திவிட்டு பாட்டில்களை போடுகின்றனர். வன வளத்தைக் கெடுப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் மற்றும் வன உயிரினப் பாதுகாவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in