அரசுப் பள்ளி ஆசிரியர் பணி நியமனம் வயது வரம்பு 40 ஆக நிர்ணயம்

அரசுப் பள்ளி ஆசிரியர் பணி நியமனம் வயது வரம்பு 40 ஆக நிர்ணயம்
Updated on
1 min read

அரசுப் பள்ளி ஆசிரியர் பணிநியமனத்துக்கு வயது வரம்பு 40 ஆக நிர்ணயம் செய்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வியின்கீழ் 44 ஆயிரம்அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில் சுமார் 3 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். பள்ளிக் கல்வியில் 1990-ம் ஆண்டு வரை அரசுப் பள்ளி ஆசிரியர் பணிநியமனத்துக்கு குறிப்பிட்ட வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

அதன்பின் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று நியமனத்துக்கான வயதுவரம்பு நீக்கப்பட்டது. இதனால் 57 வயது நிரம்பியவர்கள்கூட ஆசிரியர்களாக பணிநியமனம் செய்யப்பட்டனர். இவை பள்ளிக்கல்வியில் நிர்வாகரீதியாக பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தின.

இந்நிலையில் அரசுப் பள்ளி ஆசிரியர் நியமனத்துக்கு வயது வரம்பு நிர்ணயித்து தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. அதன் விவரம்; அனைத்து வகை ஆசிரியர் பணியிடங்களை நேரடியாக நியமனம் செய்வதற்கான வயதுவரம்பு 40 ஆக நிர்ணயம் செய்யப்படுகிறது.

இடஒதுக்கீடு பிரிவினருக்கு மட்டும் 5 ஆண்டுகள் வரை தளர்வு அளிக்கப்படும்.இதுதவிர தலைமையாசிரியர் மற்றும் மாவட்டக் கல்வி அதிகாரிகளாக பதவி உயர்வு பெற பள்ளி நிர்வாகத் திறன் தேர்விலும் ஆசிரியர்கள் கட்டாயம் தேர்ச்சி பெறவேண்டும்.

அதேபோல், அரசாணை 720-ல் திருத்தம் செய்து இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளில் வெவ்வேறு பாடங்களை படித்த ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பதவி உயர்வு (கிராஸ் மேஜர்) நடைமுறையும் ரத்து செய்யப்படுகிறது என்பன உட்பட பல்வேறு அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

இதற்கிடையே வயது வரம்பு நிர்ணயத்தால் 40 வயதுக்கு மேல் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in