இளையனார் குப்பம் புறவழிச் சாலையில் வாகன விபத்து அபாயம்: தானியங்கி சிக்னல் மற்றும் ரவுண்டானா அமைக்க கோரிக்கை

இளையனார்  குப்பம் அருகே ரவுண்டானா மற்றும் தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டிய பழைய மற்றும் புதிய சாலைகள் இணையும் பகுதி. படம்: கோ.கார்த்திக்
இளையனார் குப்பம் அருகே ரவுண்டானா மற்றும் தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டிய பழைய மற்றும் புதிய சாலைகள் இணையும் பகுதி. படம்: கோ.கார்த்திக்
Updated on
1 min read

இளையனார் குப்பத்தில் புதிய ஈசிஆர் புறவழிச் சாலையில் பழைய சாலையில் வரும் வாகனங்கள் இணையும் பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், ரவுண்டானா மற்றும் தானியங்கி சிக்னல்அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகேயுள்ள இளையனார் குப்பம் மற்றும் புதுப்பட்டினம் பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ள கிழக்குக் கடற்கரைச் சாலையில் வாகன விபத்துகள் தொடர்ந்து நடைபெறுவதால், விபத்துகளைத் தடுக்க தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் ரூ.24 கோடி மதிப்பில் புதிதாக 1.7 கி.மீ தொலைவுகொண்ட புறவழிச் சாலை அமைக்கும் பணிகளை மேற்கொண்டது.

இந்தப் புதிய புறவழிச் சாலைஅமைப்பில் 90 சதவீதப் பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்தமாதம் முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் இப்புறவழிச் சாலையை வாகனப் போக்குவரத்துக்காக திறந்து வைத்தார். பணிகள் முழுமைப் பெறாத நிலையில் இச்சாலையில் வாகனப் போக்குவரத்து நடைபெறுவதால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களை சந்திக் கின்றனர்.

இளையனார் குப்பம் பகுதியில் பழைய ஈசிஆர் சாலையில் வரும் வாகனங்கள் புதிய சாலையில் இணையும் இடத்தில் வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகும் நிலை உள்ளது. புதிய புறவழிச்சாலையின் இருபுறங்களிலும் தடுப்புகள் மற்றும் வளைவுகள் குறித்த எச்சரிக்கை பலகைகள், பிரதிபலிப்பான்கள், சாலையோர கோடுகள் இல்லாததால் சிறு, சிறு வாகன விபத்துகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

எனவே பழைய மற்றும் புதிய சாலைகள் இணையும் பகுதிகளில் ரவுண்டானா மற்றும் சிக்னல்கள் அமைக்க இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன அதிகாரி கூறியதாவது: இளையனார் குப்பம், புதுப்பட்டினம் பகுதிகளில் ரவுண்டானாஅமைப்பதற்காக சோதனை வடிவில் தற்காலிக அமைப்புகளைஏற்படுத்தி, வாகனப் போக்குவரத்தை கண்காணித்து வருகிறோம். இதன்மூலம், விபத்துகளை தடுக்கும் சாத்தியக்கூறுகளை கவனத்தில் கொண்டு நிரந்தர அமைப்புகள் ஏற்படுத்தப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in