

பள்ளிப்பட்டு அருகே பொதட்டூர்பேட்டையில் முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை நேற்று திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி சிறப்பு தத்து மையத்தினரிடம் ஒப்படைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே பொதட்டூர்பேட்டையில் முட்புதரில் கடந்த 5-ம் தேதி பச்சிளம் பெண் குழந்தையை யாரோ முட்புதரில் வீசிவிட்டு சென்றிருந்தனர். அந்த குழந்தையை அவ்வழியாக வந்த தேவன் என்பவர் மீட்டு, பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தார். பின்னர், அந்த குழந்தை திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரிகளிடம் ஒப்படைத்தது.
அந்த குழந்தைக்கு நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மகேஸ்வரி, ’குந்தவை ’ என்று பெயரிட்டு, தற்காலிகமாக சென்னை, முகப்பேரில் செயல்படும் கலைச்செல்வி கருணாலயா சிறப்பு தத்து மையத்தினரிடம் ஒப்படைத்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட குழந்தை நலக்குழு தலைவர் வனஜா முரளிதரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தஸ்தகீர் மற்றும் நன்னடத்தை அலுவலர் கலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
குழந்தை குந்தவைக்கு உரியவர்கள் யாரேனும் இருப்பின் தங்கள் ஆட்சேபத்தை, 15 நாட்களுக்குள், மாவட்ட குழந்தைகள் நலக்குழு, எண்.13, டாக்டர் அப்துல்கலாம் தெரு, எம்.டி.எம். நகர், திருவள்ளூர் -602001 என்ற முகவரியில் தெரிவிக்கலாம். இல்லாதபட்சத்தில் குழந்தையை தத்து கேட்டு விண்ணப்பித்துள்ள பெற்றோருக்கு தத்துக் கொடுக்கப்படும். விரிவான விவரங்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் , மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்.48, ஜே.என்.ரோடு, திருவள்ளூர் (போன் : 044 – 27665595, 97895 12728) என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.