

தேசிய கட்சியின் மாநில நிர்வாகிகள் சொல்லும் கருத்துகள் அங்கீகரிக்கப்பட்டவை அல்ல என்று அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் கூறியாவது:
பாஜகவில் மூத்த தலைவரான அமித்ஷா போன்றோர் கூறும் கருத்துகளே அங்கீகரிக்கப்பட்ட கருத்துகள். அவர்கள் தெரிவிக்கும் கருத்துகள்தான் கூட்டணிக்கான கருத்துகள் என கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். தேசிய கட்சிகளின் மாநில நிர்வாகிகள் கூறும் கருத்துகள் அங்கீகரிக்கப்பட்டவை இல்லை.
பினாமி சொத்துக்கள்
உதயநிதி ஸ்டாலின், முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவரையும் தரம் தாழ்ந்த வார்த்தைகளில் விமர்சனம் செய்து வருகிறார். அவர்சிறியவர் என்பதால் மன்னித்து விடுகிறோம். அவர் இனி பேசுவதாக இருந்தால் வீட்டில் இருந்து பெரியவரை அனுப்பி வைக்கவேண்டும்.
அதிமுகவை முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவரும் சிறப்பான பாதையில் எடுத்துச் செல்கின்றனர். அதிமுகவில் குடும்ப அரசியலுக்கு வழியில்லை. கூவத்தூர் பங்களா முதலிய சொத்துகள் முடக்கத்துக்கு அரசியல் காரணங்கள் எதுவுமில்லை. பினாமி சொத்துகள் என்பதால்தான் அவை முடக்கப்படுகின்றன. இதில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை என்றார்.