

சேலம் நிலவாரப்பட்டியில் துணைமின் நிலையம் அமைப்பது தொடர்பாக விளக்கம் கேட்டு தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய 2-ம் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக நிலவாரப்பட்டியைச் சேர்ந்த எஸ்.தனராஜன் தாக்கல் செய்த மனுவில், “நிலவாரப்பட்டி கிராமத்தில், 3 ஏக்கர் பரப்புள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் துணை மின் நிலையம் அமைய உள்ளது. அதற்காக அங்குள்ள 500 பனை மரங்கள் வெட்டப்பட உள்ளதால் நீர் வளம், அம்மரங்களில் வாழும் பறவைகள், விலங்கினங்கள் அழியும். அதனால் அங்கு துணைமின் நிலையம் அமைக்க தடை விதிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த மனு அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி பி.ஜோதிமணி, தொழில்நுட்பத்துறை உறுப்பினர் பேராசிரியர் ஆர்.நாகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
“சம்மந்தப்பட்ட நிலத்தில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும். இது தொடர்பாக தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் பதில் அளிக்க கோரி நோட்டீஸ் அனுப்ப வேண்டும்” என்று உத்தரவிட்ட அமர்வின் உறுப்பினர்கள், மனு மீதான அடுத்த விசாரணையை அக்டோபர் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.