Published : 29 Sep 2015 04:11 PM
Last Updated : 29 Sep 2015 04:11 PM

மதுரை மத்திய சிறையில் எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபடாத கைதிகளுக்கு ‘நன்னடத்தை இல்லவாசி’ சான்று

மதுரை மத்திய சிறையில் எந்த ஒரு குற்றச்செயலிலும் ஈடுபடாத கைதிகளுக்கு ‘நன்னடத்தை இல்லவாசி’ சான்று வழங்கி, மாதத்தின் ஒவ்வொரு கடைசி ஞாயிற்றுக்கிழமையும் குடும்பத்தினருடன் கைதிகள் பக்கத்தில் அமர்ந்து 45 நிமிடம் வரை பேச சிறப்பு அனுமதி வழங்கும் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

மதுரை மத்திய சிறைச்சாலை 30 ஏக்கரில் அமைந்துள்ளது. இதில் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறை வளாகம் மட்டும் 12 ஏக்கரில் உள்ளது. இந்த சிறை வளாகத்தில் கடந்த காலத்தில் கட்டாந்தரையாக இருந்தது. சில அதிகாரிகள் முயற்சியால் இந்த நிலத்தை கைதிகள் தற்போது பராமரித்து அங்கு நர்சரி பண்ணை, காய்கறித் தோட்டம் அமைத்து மல்லி, பிச்சி, முல்லை, கனகாம்பரம், செம்பருத்தி, ரோஜா, அரளி, ஆஸ்டர், ஆடா தொடை, லண்டனா, டங்கி டயர் உள்ளிட்ட 60 வகையான பூக்கள், மூலிகைச் செடிகள் மற்றும் காய்கறிகளை உற்பத்தி செய்து பொதுமக்களுக்கு விற்கின்றனர்.

தனியார் நர்சரி பண்ணைகளில் ரூ.40 முதல் ரூ. 50-க்கும் விற்கும் இந்த செடிகளின் நாற்றுகள் சிறை வளாகத்தில் ரூ. 15-க்கு மலிவு விலையில் விற்கப்படுவதால் தினமும் ஏராளமான மக்கள் இங்கு வந்து நாற்றுகளை விரும்பி வாங்கிச் செல்கின்றனர். நுண்ணீர் பாசனத்தில் கீரைகளையும் வளர்த்து விற்கின்றனர்.

இங்கு கைதிகள் சாகுபடி செய்துள்ள சர்க்கரை நோய் கொல்லி செடிகளில் (இன்சுலின் செடி) தினமும் இரண்டு இலைகளை சாப்பிட்டு வந்தால், ஒரு வாரம் கழித்து பரிசோதனை செய்து பார்த்தால், சர்க்கரை நோயின் அளவு குறைந்துவிடும் என்கின்றனர் சிறைத்துறை அதிகாரிகள்.

இதுகுறித்து சிறை கண்காணிப்பாளர் இரா. அறிவுடை நம்பி, கூடுதல் கண்காணிப்பாளர் டி.தமிழ்செல்வன் ஆகியோர் கூறியதாவது:

சிறைக் கைதிகள் மேற்கொள்ளும் சுயதொழில் மூலம், மாதம்தோறும் ரூ. 1.30 லட்சம் முதல் ரூ. 1.50 லட்சம் வரை லாபம் கிடைக்கிறது. கைதிகளுக்கு இதுபோன்ற சுயதொழில் வேலைவாய்ப்பை வழங்கும் சிறைத்துறை நிர்வாகம், தற்போது அவர்கள் உடல், மனம், கல்வி நலன் மற்றும் உளவியல் நலனில் அக்கறை செலுத்தத் தொடங்கியுள்ளது. தினமும் காலையில் எழுந்ததும் சிறை வளாகத்திலேயே கைதிகள் நடை பயிற்சி மற்றும் யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. சிறைக்குள் இருக்கும் நூலகத்துக்குச் சென்று புத்தகங்களை படிக்க வைப்பது, அவரவர் கல்வித் தகுதிக்கு ஏற்ப உயர்கல்வி படிக்கவும் சிறைத்துறை நிர்வாகம் தேவையான உதவிகளைச் செய்கிறது.

சிறைத்துறையின் இந்த நன்னடத்தை விதிமுறைகளைப் பின்பற்றி மற்ற கைதிகளை தாக்காமல், செல்பேசிகளை பயன்படுத்தாமல், கஞ்சா கடத்தாமல் இருப்பது உள்ளிட்ட எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபடாத கைதிகளை கண்காணித்து, அவர்களுக்கு சிறைத்துறை நிர்வாகம் ‘நன்னடத்தை இல்லவாசி’ சான்று வழங்கி வாரம்தோறும் மனைவி, குடும்பத்தினருடன் பக்கத்தில் அமர்ந்து 45 நிமிடம் பேச சிறப்பு அனுமதி வழங்கும் புதிய நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது.

தற்போது, மதுரை சிறையில் 85 கைதிகள் ‘நன்னடத்தை இல்லவாசி’ சான்று பெற்றுள்ளனர். பொதுவாக சிறையில் கைதிகள், உறவினர்களை கம்பி வலைகளுக்குப் பின்னால் சிறைக் காவலர்கள் கண்காணிப்பில் நின்றுதான் சந்தித்துப் பேச முடியும்.

‘நன்னடத்தை இல்லவாசி’ கைதிகளுக்கு மட்டும், சிறைத்துறையின் சிறப்பு அனுமதி பெற்று ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை குடும்பத்தினரை சிறை வளாகத்தில் பக்கத்தில் தனிமையில் அமர்ந்து 30 நிமிடம் முதல் 45 நிமிடம் பேச வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

விரைவில் பெண் கைதி சிறை திறப்பு

மதுரை மத்திய சிறையில், கடந்த காலத்தில் பெண்கள் சிறை செயல்பட்டது. அதன்பின், மூடப்பட்டதால் தென்மாவட்ட பெண் கைதிகள், திருச்சி, திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பெண் கைதிகள் சிறைகளுக்கு அழைத்துச் சென்று அடைக்கப்பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி பெண் கைதிகளை அழைத்துச் செல்வது பாதுகாப்பாக இல்லாமல் இருந்தது. பெண் கைதிகளும் கடும் அலைக்கழிப்புக்கு ஆளாகினர். இதையடுத்து, மதுரை மத்திய சிறை வளாகத்தில் 240 பெண் கைதிகளை அடைக்கும் வகையில் புதிய பெண்கள் சிறை கட்டப்படுகிறது. இப்பணி தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது. சிறை வளாகத்திலேயே பெண்கள் சிறையில் பணிபுரியும் போலீஸார் தங்குவதற்கு குடியிருப்புகளும் தயாராகி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x