ஊழலுக்கு நீதித் துறையும் விதிவிலக்கல்ல; ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை: உயர் நீதிமன்றம்

ஊழலுக்கு நீதித் துறையும் விதிவிலக்கல்ல; ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை: உயர் நீதிமன்றம்
Updated on
1 min read

ஊழலுக்கு நீதித் துறை விதிவிலக்கல்ல, அதைச் சரிசெய்ய இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்த பத்திரப் பதிவுத்துறை ஊழியர் என்.உலகராஜ். இவர் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் 2007-ல் பணி நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் பணி நீக்க உத்தரவு மாற்றியமைக்கப்பட்டுக் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது. இதை எதிர்த்து உலகராஜ் உயர் நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவு:

''தமிழகத்தில் ஊழல் மற்றும் கண்காணிப்புத் துறையை பலப்படுத்த வேண்டும். அரசு அலுவலகங்களில் ஊழல் மற்றும் கண்காணிப்புத் துறையினர் அடிக்கடி சோதனை நடத்தி ஊழலை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு ஊழியர்களின் சொத்து விவரங்களை அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். அரசுத் துறைகளில் ஊழலை ஒழிக்க, ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளை அரசு பிறப்பிக்க வேண்டும்.

நீதித் துறையில் ஊழல் விதிவிலக்கல்ல. நீதித்துறையில் ஊழல் என்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அரசுத் துறையில் உள்ள ஊழலைவிட அது மோசமானது. நீதித்துறை என்பது சாதாரண மனிதனின் கடைசி புகலிடமாக உள்ளது.

நீதித்துறை மீது ஒவ்வொரு குடிமகனுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டியது அரசியல் அமைப்புச் சட்டத்தின் கடமையாகும். நீதித்துறை மீது மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் அது அரசியல் அமைப்புச் சட்டக் கொள்கையை அழிப்பதாகிவிடும். நீதித்துறையில் தற்போது உள்ள ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. இதனால் நீதித்துறை, ஊழல் தடுப்புத் துறையைப் பலப்படுத்த வேண்டும்.

மனுதாரரின் கோரிக்கை ஏற்க முடியாது. அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது''.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in