

காவல் நிலையங்களில் சிசிடிவியில் பதிவாகும் காட்சிகளை காவல்துறையினர் கையாள முடியாத வகையில் அவற்றை பாதுகாத்து வைப்பதற்கான திட்டத்தை வகுக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சாத்தான் குளம் தந்தை மகன் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் ஸ்டேஷனில் உள்ள சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்களின் அவசியம் மற்றும் அதை போலீஸார் தங்களிஷ்டப்படி செயல்படுத்தக்கூடாது என்கிற கோரிக்கை எழுந்தது.
காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராவின் அவசியத்தை உணர்த்துவதாக உள்ளது. இந்நிலையில் பாலவாக்கத்தை சேர்ந்த நிஜாமுதீன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அவரது மனுவில் “விசாரணை கைதிகள் காவல்நிலையத்திற்குள் கடுமையாக தாக்கப்படுவது, தங்கள் அதிகாரத்தை மீறி காவல்துறையினர் செயல்படுவது என மனித உரிமை மீறல்கள் காவல்நிலையங்களில் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
இதனை தடுக்கப்பதற்கு காவல்நிலையங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவது அவசியம். மேலும் காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தபடுவதால், விசாரணைக்கு அழைத்து வரப்படுபவர்கள் தாக்கப்படுவது, லாக் அப் மரணங்கள் தடுக்கப்பதற்கும் அது தொடர்பான விசாரணைக்கும் மிக முக்கிய ஆதாரம் இருக்கும்.
நீதிமன்றம் சிசிடிவி கேமராக்களை காவல்நிலையங்களில் பொருத்த உத்தரவிட்டும் தமிழகத்தில் காவல்நிலையங்களில் முழுமையாக சிசிடிவி பொருத்தப்படவில்லை. பல காவல்நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பாரமரிப்பு இல்லாமல் இயங்காத நிலையில் இருக்கிறது. காவல் நிலையத்திற்குள் நடக்கும் குற்றங்களை மறைக்க சிசிடிவியை காவல்துறையினர் கையாண்டு அவர்களுக்கு சாதகமாக ஆதாரமான காட்சி பதிவுகளை நீக்கி விடுவதும் நடக்கிறது.
இத்தகைய நடவடிக்கைகள் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தை மகன் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்தது தொடர்பாக வழக்கு விசாரணையில் கூட காவல்நிலையத்தில் உள்ள சிசிடிவியை காவல்துறையினர் கையாண்டதால் ஆதாரங்களை அழித்தனர்.
எனவே காவல்நிலையங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவதோடு, அதை முறையாக பராமரிப்பதற்கும், சிசிடிவியில் பதிவாகும் காட்சிகளை காவல்துறையினர் அழிக்காமல் பாதுகாத்து வைப்பதற்கு தேவையான திட்டங்களையும், விதிகளையும் உருவாக்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வு, இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் தமிழக டிஜிபி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நவம்பர் - 6 ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.