காரைக்குடியில் வெளிநாட்டினர் வியந்த 71 ஆண்டுகள் பாரம்பரியச் சாலையை உடைக்க எதிர்ப்பு

காரைக்குடி ரயில் நிலையம் பகுதியில் செட்டிநாடு முறைப்படி கட்டப்பட்டு 71 ஆண்டுகளாக சேதமாகாத சிமெண்ட் சாலை.
காரைக்குடி ரயில் நிலையம் பகுதியில் செட்டிநாடு முறைப்படி கட்டப்பட்டு 71 ஆண்டுகளாக சேதமாகாத சிமெண்ட் சாலை.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வெளிநாட்டினர் பார்த்து வியந்த, 71 ஆண்டுகளாக சேதமாகாத பாரம்பரியச் சாலையை உடைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

காரைக்குடியில் ரூ.112.53 கோடியில் பாதாளச் சாக்கடை அமைக்கும் பணி 4 ஆண்டுகளாக நடந்து வருகிறது. ரயில் நிலையத்தில் இருந்து இடையர் தெரு வரை 2.5 கி.மீ.க்கு கடந்த 1949-ம் ஆண்டு செட்டிநாட்டு முறைப்படி கடுக்காய், கருப்பட்டி போன்ற கலவையைப் பயன்படுத்தி சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலை, செட்டிநாடு பாரம்பரியச் சின்னமாக விளங்குகிறது. 71 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இச்சாலையில் சிறிய சேதம் கூட ஏற்படாமல் கம்பீரமாக உள்ளது.

இன்றும் சுற்றுலா வரும் வெளிநாட்டினர் இச்சாலையைப் பார்த்து வியந்து பாராட்டிச் செல்கின்றனர். இத்தகைய பாரம்பரியச் சாலையைப் பாதாளச் சாக்கடை பணிக்காக உடைக்கும் பணி நடைபெற்றது. இதனை மக்கள் மன்றத் தலைவர் ராஜ்குமார் தலைமையில், பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.

மேலும் பல்வேறு அமைப்புகள் இணைந்து போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து டிஎஸ்பி அருண் தலைமையில் இன்று சமாதானக் கூட்டம் நடந்தது. நகராட்சி ஆணையர் (பொ) ரங்கராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்ட முடிவில் பாரம்பரியச் சாலையை உடைப்பதில்லை எனவும், தேவகோட்டை சாலை, வ.உ.சி சாலை, செக்காலை சாலை, வருமானவரி அலுவலகச் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பாதாளச் சாக்கடை பணிகளை விரைவில் முடிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in