Published : 09 Oct 2020 07:50 PM
Last Updated : 09 Oct 2020 07:50 PM

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் எல்இடி பல்புகளாக மாறிய தெருவிளக்குகள்: மதுரை மாநகராட்சிக்கு மின் கட்டணம் ரூ.86 லட்சம் குறைந்தது

மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளில் உள்ள தெருக்களில் தெருவிளக்குகள் எல்இடி பல்புகளாக மாற்றப்பட்டதால் மாநகராட்சிக்கு மின் கட்டணம் ரூ.86 லட்சம் குறைந்துள்ளது.

மின்சாரச் சேமிப்பை ஊக்குவிக்க உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள அனைத்து தெருவிளக்குகளும் தற்போது எல்இடி பல்புகளாக மாற்றப்படுகின்றன. அந்த அடிப்படையில் மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளிலும் உள்ள தெருவிளக்குகளில் 90 சதவீதம் எல்இடி பல்புகளாக மாற்றப்பட்டுள்ளன. மதுரை மாநகராட்சியில் மொத்தம் 53,890 தெரு விளக்குகள் உள்ளன.

இதில், பழைய 72 வார்டுகளில் உள்ள 30,500 பல்புகள், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.25 கோடி மதிப்பீட்டில் எல்இடி பல்புகளாக மாற்றப்பட்டன. புதிதாகச் சேர்க்கப்பட்ட 28 வார்டுகளில் 14,900 டியூப்லைட்டுகள் மட்டும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு பணி திட்டத்தின் கீழ் எல்இடி விளக்குகளாக மாற்றப்பட்டன. மீதமுள்ள சோடியம் விளக்குகள், மற்ற விளக்குகள் அதே நிலையில் தொடர்கின்றன. தற்போது பெரும்பாலான தெருவிளக்குகள் அனைத்தும், எல்இடி பல்புகளாக மாற்றப்பட்டதால் தெருவிளக்கு மின்சாரக் கட்டணம் மாநகராட்சிக்கு 50 சதவீதம் குறைந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘சாலை அகலம், போக்குவரத்து, மக்கள் நெருக்கம் அடிப்படையில் கூடுதல் வாட்ஸ் பல்புகள் போடப்படுகின்றன. சிறிய சந்துகள் கொண்ட தெருக்களில் 20 வாட்ஸ் எல்இடி பல்புகளும், குடியிருப்புப் தெருக்களில் 40 மற்றும் 60 வாட்ஸ் பல்புகளும், பஸ் போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் மிகுந்த முக்கிய சாலை மற்றும் சந்திப்புகளில் 90 வாட்ஸ், 200 வாட்ஸ் பல்புகளும் போட்டுள்ளோம். அண்ணா பேருந்து நிலையம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், கோரிப்பாளையம், பைபாஸ் ரோடு உள்ளிட்ட முக்கியச் சந்திப்புகளில் 200 வாட்ஸ் எல்இடி பல்புகள் போட்டுள்ளோம். டியூப்லைட்டுகள், சோடியம் விளக்குகள் அனைத்தும் எல்இடி பல்புகளாக மாற்றப்பட்டுள்ளதால் மாநகராட்சிக்கு கடந்த ஓராண்டாக மிகப்பெரிய அளவில் மின் கட்டணம் குறைந்துள்ளது.

100 வார்டுகளுக்கும் உள்ள தெருவிளக்குகளுக்கு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ஒரு கோடியே 74 லட்சத்து 14 ஆயிரம் மின் கட்டணம் வந்தது. தற்போது 2020-ம் ஆண்டில் 2 மாதத்திற்கு ஒரு முறை மின் கட்டணம் ரூ.87 லட்சத்து 69 ஆயிரம் மட்டுமே வருகிறது. மின் கட்டணம் சராசரியாக 2 மாதத்திற்கு ஒரு முறை 86 லட்சம் மிச்சமாகிறது. அதனால், புறநகர் 28 வார்டுகளில் எல்இடி பல்புகளாக மாற்றப்படாத பிற விளக்குகளையும் எல்இடி பல்புகளாக மாற்ற மாநகராட்சி ஆணையாளர் விசாகன் நடவடிக்கை எடுத்துள்ளார். அவரது முயற்சியாலே இந்த மின் கட்டணம் குறைந்துள்ளது’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x