

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதிகளில் வெள்ளைக்கழிச்சல் நோயால் நாட்டுக் கோழிகள் அழிந்து வரும் நிலையில், கால்நடை மருந்தகங்களில் இந்நோய்க்கு மருந்து இல்லாததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்து பிரதான தொழிலாக ஆடு, மாடு, நாட்டுக்கோழி வளர்ப்பு உள்ளது. ஒருசிலர் மட்டுமே பண்ணை முறையில் கோழி வளர்ப்பில் ஈடுபடுகின்றனர். பெரும்பாலான விவசாயிகள் தங்களது வீடுகளில் வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக சிவகங்கை மாவட்டம் முழுவதும் கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் நோய் வேகமாகப் பரவி வருகிறது.
இதனால் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் இறந்து வருகின்றன. ஆனால், இந்நோய்க்குப் பல கால்நடை மருந்தகங்களில் மருந்து இல்லை. இதனால் கோழிகளின் இறப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மருந்து கிடைக்காததால் திருப்புவனம் அருகே கே.பெத்தானேந்தல், மணல்மேடு உள்ளிட்ட பகுதிகளில் ஒரே நாளில் 50-க்கும் மேற்பட்ட கோழிகள் இறந்துள்ளன. இதனால் அப்பகுதி விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் கிராமங்களில் சிறப்பு முகாம்களை நடத்தி வெள்ளைக்கழிச்சல் நோயில் இருந்து கோழிகளைக் காப்பாற்ற வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து மணல்மேடு விவசாயி ராஜா கூறுகையில், ''எனது உறவினர் ஒருவரது வீட்டில் ஒரே நாளில் 13 கோழிகள் இறந்தன. அதேபோல் எனது வீட்டிலும் 10-க்கும் மேற்பட்ட கோழிகள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. திருப்புவனம் புதூர், பூவந்திக்கு அரசு கால்நடை மருந்தகங்களுக்கு கோழிகளைக் கொண்டு சென்றாலும் மருந்து இல்லை எனத் திருப்பி அனுப்புகின்றனர். மருந்து கிடைக்காததால் கோழிகள் இறந்து வருகின்றன'' என்று கூறினார்.
இதுகுறித்து கால்நடை பராமரிப்புத் துறையினர் கூறுகையில், ''விவசாயிகள் புகாரையடுத்து கால்நடை மருந்தகங்களுக்கு மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன'' என்று தெரிவித்தனர்.