திண்டுக்கல் சிறுமி வழக்கில் குற்றவாளி விடுதலை; அரசு உடனடியாக மேல்முறையீடு செய்யவேண்டும்: ஸ்டாலின், ராமதாஸ் வலியுறுத்தல்

திண்டுக்கல் சிறுமி வழக்கில் குற்றவாளி விடுதலை; அரசு உடனடியாக மேல்முறையீடு செய்யவேண்டும்: ஸ்டாலின், ராமதாஸ் வலியுறுத்தல்
Updated on
1 min read

திண்டுக்கல் சிறுமி கொலை வழக்கில் குற்றவாளி விடுவிக்கப்பட்ட நிலையில், தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த 2019-ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகேயுள்ள குரும்பட்டி கிராமத்தில் வசித்த 12 வயதுச் சிறுமி கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு மின்சாரம் பாய்ச்சி கொலை செய்யப்பட்டார். தாயார் கடைக்குச் சென்று விட்டு திரும்பும் நேரத்தில் தனியாக இருந்த சிறுமி இக்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இவ்வழக்கில் எதிர்வீட்டைச் சேர்ந்த 17 வயதுச் சிறுவன் கைது செய்யப்பட்டார். வன்கொடுமை செய்து பின் மின்சாரம் பாய்ச்சி சிறுமியைக் கொலை செய்ததை அச்சிறுவன் ஒப்புக்கொண்டதாக போலீஸார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்கை நடத்தினர்.

ஆனால், வழக்கில் போதிய ஆதாரங்களைத் தாக்கல் செய்யவில்லை எனக் கீழமை நீதிமன்றம் குற்றவாளியை விடுவித்தது. இதுகுறித்து உரிய ஆதாரங்களுடன் மேல்முறையீடு செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் இருவரும் வலியுறுத்தியுள்ளனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட முகநூல் பதிவு:

“திண்டுக்கல்லில் முடிதிருத்தும் தொழிலாளரின் மகளான 12 வயதுச் சிறுமியை பாலியல் கொடூரத்திற்குள்ளாக்கி, மின்சாரம் பாய்ச்சிக் கொன்ற வழக்கில், அரசுத் தரப்பு போதுமான சாட்சியங்களை நிரூபிக்காததால், குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

அதிமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாகத் தமிழகம் மாறிக்கொண்டிருப்பதை இது உறுதிப்படுத்துகிறது. இந்தக் கொடூரத்திற்கு நீதி கேட்டு, முடிதிருத்தும் தொழிலாளர்கள் தமிழகம் தழுவிய அளவில் கடையடைப்புப் போராட்டம் நடத்தியுள்ளனர். அதிமுக அரசு இனியும் அலட்சியம் காட்டாமல், உடனடியாக மேல்முறையீடு செய்து நீதியை நிலைநாட்ட வேண்டும்.

கல்லூரி மாணவி சரிகாஷா வன்பகடியால் (ராகிங்) உயிரிழந்த நிலையில், அதற்குக் காரணமான குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கித் தந்ததுடன், வன்பகடிக்கு எதிரான சட்டத்தை நிறைவேற்றி - நடைமுறைப்படுத்திய மறைந்த முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசின் முன்னெடுப்பையும் இங்கே நினைவூட்டுகிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸும் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை வலியுறுத்தியுள்ளார்.

“திண்டுக்கல் மாவட்டம் குரும்பட்டியில் கலைவாணி என்ற நாவிதர் சமுதாயத்தைச் சேர்ந்த 13 வயதுச் சிறுமியைக் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்த வழக்கிலிருந்து 19 வயதுக் குற்றவாளி விடுதலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

கலைவாணியின் படுகொலைக்கு நீதி கேட்டு அவரது குடும்பமும், சமுதாயமும் இன்று அறவழிப் போராட்டம் நடத்துகின்றன. அவர்களின் உணர்வை மதித்து இந்த வழக்கில் மேல்முறையீடு செய்து குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்”.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in