

சட்டத்துக்குப் புறம்பான செயல்களில் ஈடுபடும் வழக்கறிஞர்களுக்கு சங்கம் பாதுகாப்பு அளிக்காது என சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் தெரிவித்தார்.
வழக்கறிஞர் காமேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பால்கனகராஜ் கூறியதாவது:
எந்தவொரு வழக்கறிஞரும் பார் கவுன்சிலில் பதிவு செய்து ஏதாவது ஒரு சங்கத்தில் உறுப்பினரான பிறகு, அவருக்கு தொழில்ரீதியான பிரச்சினை ஏற்பட்டால், சங்கம் துணை நிற்கும். அதாவது வக்காலத்து வாங்கும்போது வழக்கறிஞர் தாக்கப்பட்டாலோ, கொல்லப்பட்டாலோ சங்கம் நிச்சயம் அதில் தலையிடும். அது தொழிலுக்கான பாதுகாப்புதானே தவிர, தனிநபருக்கான பாதுகாப்பு கிடையாது.
அதே நேரத்தில் வழக்கறிஞரின் தனிப்பட்ட விரோத செயல்களுக்கு சங்கம் ஒருபோதும் துணை போகாது. மேலும் சட்டத்துக்குப் புறம்பாக ஒரு வழக்கறிஞர் செயல்படுகிறார் என்றால் அவருக்கு சங்கம் நிச்சயம் பாதுகாப்பு அளிக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.