30 நாட்கள் பரோலில் வீட்டுக்குச் சென்றார் பேரறிவாளன்; நிரந்தரமாக விடுதலை செய்ய தாய் கோரிக்கை

பரோலில் வீட்டுக்கு வந்துள்ள பேரறிவாளன்
பரோலில் வீட்டுக்கு வந்துள்ள பேரறிவாளன்
Updated on
2 min read

பேரறிவாளனை நிரந்தரமாக விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம் அம்மாள் வேண்டுகோள் விடுத்தார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஜோலார்பேட்டையைச் சேர்ந்த பேரறிவாளன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்ய அரசு உத்தரவிட வேண்டும் என அவரது தாயார் அற்புதம் அம்மாள் வேண்டுகோள் விடுத்து வருகிறார்.

இந்நிலையில், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சிறுநீரக தொற்று காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம் அம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதைத்தொடர்ந்து, பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. இதற்கான உத்தரவு சிறைத்துறை நிர்வாகத்துக்கு வழங்கப்பட்டது. அதன்படி, இன்று (அக். 9) காலை 10 மணிக்கு சென்னை புழல் சிறையில் இருந்து பேரறிவாளன் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஒன்றியம், இடையம்பட்டியில் உள்ள அவரது வீட்டுக்கு பலத்த காவல் துறை பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.

சென்னை ஆயுதப்படை (மவுண்ட்) துணை ஆணையர் சவுந்தரராஜன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பேரறிவாளனை பலத்த பாதுகாப்புடன் ஜோலார்பேட்டைக்கு அழைத்து வந்தனர். முன்னதாக பேரறிவாளன் வீடு அமைந்துள்ள இடையம்பட்டி தங்கவேல் பீடித்தெருவில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் தங்கவேல் தலைமையில், ஜோலார்பேட்டை காவல் துறையினர் 30-க்கும் மேற்பட்டோர் அங்கு குவிக்கப்பட்டனர். காலை 10 மணிக்கு சென்னை புழல் சிறையில் இருந்து புறப்பட்ட பேரறிவாளன் பகல் 1.45 மணிக்கு ஜோலார்பேட்டைக்கு வந்தடைந்தார். அவரை அற்புதம் அம்மாள் மற்றும் உறவினர்கள் வரவேற்றனர்.

கரோனா பரவல் காரணமாக பேரறிவாளன் வீட்டுக்கு வந்ததும் அவர் அணிந்திருந்த முகக்கவசம் மாற்றப்பட்டு புதிய முகக்கவசம் வழங்கப்பட்டது. அதற்கு முன்னதாக சோப்புப் போட்டு கை மற்றும் கால்களை அவர் கழுவியவுடன் வீட்டுக்குள் சென்றார்.

கடந்த 2017-ம் ஆண்டும், 2019-ம் ஆண்டும் பேரறிவாளனுக்கு 2 முறை பரோல் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 3-வது முறையாக பரோல் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேரறிவாளனுக்கு வழங்கப்பட்டுள்ள 30 நாட்கள் பரோல் காலத்தில் அவர் வெளியே செல்லவும், அறிமுகம் இல்லாத ஆட்களை சந்தித்துப் பேசவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்தபடியே அவருக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கவும், தேவைப்பட்டால் காவல் துறை அனுமதியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

30 நாட்கள் பரோல் காலத்தில் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் தினசரி ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேரறிவாளன் வீட்டின் முன்பாக காவல் ஆய்வாளர் தலைமையில் 2 உதவி ஆய்வாளர்கள் உட்பட 10 காவலர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்புப்பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பேரறிவாளனை சந்திக்க வரும் நபர்கள் குறித்து கண்காணிப்பார்கள் என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரறிவாளன் பரோலில் வீடு திரும்பியது குறித்து அவரது தாயார் அற்புதம் அம்மாள் செய்தியாளர்களிடம் கூறுகையில், "என் மகனின் உடல் நிலையை கருத்தில் கொண்டு 90 நாட்கள் பரோல் கேட்டேன். ஆனால், 30 நாட்கள் மட்டுமே பரோல் வழங்கப்பட்டுள்ளது. என் கணவர் குயில்தாசன் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. தற்போது அவர் கிருஷ்ணகிரியில் உள்ள என் மகள் வீட்டில் ஓய்வில் இருக்கிறார். அவரை சந்திக்க பேரறிவாளனுக்கு அனுமதி கிடைக்குமா? என தெரியவில்லை. ஆனால், அதற்காக முயற்சி செய்வேன்.

என் மகன் விடுதலை செய்யப்படுவார் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எனக்கு வாக்குறுதியளித்தார். தமிழக அமைச்சரவையும் பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், 2 ஆண்டுகள் கடந்தும் தமிழக ஆளுநர் அதற்கான உத்தரவை வழங்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது.

இதுவரை யாரும் அனுபவிக்காத தண்டனையை என் மகன் அனுபவித்துவிட்டார். இளமை காலம் முழுவதும் சிறையிலேயே கழிந்துவிட்டது. தற்போது சிறுநீரக தொற்று, காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளால் அவர் அவதிப்படுகிறார். அவரது உடல் நிலையை சரி செய்து கொள்ள பரோல் வழங்கப்பட்டுள்ளது. இது போதாது, பேரறிவாளனுக்கு நிரந்தர விடுதலை வேண்டும் என்பதே என் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் அதற்கான ஏற்பாடுகளை விரைந்து செய்ய வேண்டும்" என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in