

மக்களின் உணர்வுடன் தொடர்புடைய மொழி விவகாரங்களை மத்திய அரசு கவனமாகக் கையாள வேண்டும் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
உத்தரப் பிரதேசம் கிரேட்டர் நொய்டாவில் செயல்படும் மத்தியத் தொல்லியல் கல்லூரியில் 2 ஆண்டு முதுகலைத் தொல்லியல் பட்டயப் படிப்புக்கான அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர் ரமேஷ்குமார் சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ''மத்தியத் தொல்லியல் கல்லூரியில் இந்திய வரலாறு, தொல்லியல் துறை, மானிடவியல் ஆகிய துறைகளில் முதுகலைப் பட்டம் மற்றும் சம்ஸ்கிருதம், பாலி, மற்றும் அரபு மொழிகளில் தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வித் தகுதியில் பழமையும், பெருமையும் மிக்க செம்மொழியான தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பாணையை ரத்து செய்து, கல்வித் தகுதியில் செம்மொழியான தமிழ் மொழியையும் இணைக்க உத்தரவிட வேண்டும்'' என்று கூறப்பட்டிருந்து.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் ஆர்.அழகுமணி வாதிடுகையில், ''தொல்லியல் கல்லூரி பல ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. இப்பட்டயப் படிப்பை முடித்தாலே தொல்லியல் துறையில் கண்டிப்பாகப் பணி கிடைக்கும்'' என்றார்.
மத்திய அரசு சார்பில் உதவி சொலிசிட்டர் ஜெனரல் விக்டோரியா கவுரி வாதிடுகையில், ''மத்திய அரசு தமிழ் மொழிக்கு உரிய மரியாதை மற்றும் முக்கியத்துவம் வழங்கி வருகிறது. தமிழ் மொழியை எப்போதும் புறக்கணிப்பதில்லை. தமிழ் மொழி உள்பட அனைத்துச் செம்மொழிகளையும் சேர்த்துப் புதிய அறிவிப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது'' என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், ''மொழி, உணர்வுடன் சம்பந்தப்பட்டது. மொழி விவகாரங்களை எந்த மத்திய அரசாக இருந்தாலும் கவனமாகக் கையாள வேண்டும். 1956-ல் மொழி அடிப்படையில்தான் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. சாதி, மத அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்படவில்லை. அந்த அளவு மொழி என்பது ஒவ்வொருக்கும் முக்கியமானது.
மொழி அடிப்படையில் எந்தப் பிரச்சினையும் வரக்கூடாது. அதற்கான வாய்ப்புகளை ஏன் ஏற்படுத்திக் கொடுக்கிறீர்கள்? மத்திய அரசில் இருக்கும் சில அதிகாரிகள் மொழி விவகாரங்களில் தொடர்ந்து தவறான முடிவு எடுக்கின்றனர். அவர்களிடம் அரசு கவனமாக இருக்க வேண்டும். எதிர்காலத்தில் இது தவிர்க்கப்பட வேண்டும்.
செம்மொழியாக அறிவித்துள்ள தமிழ் உள்ளிட்ட மொழிகளைப் புறக்கணித்து அக்.6-ல் அறிவிப்பாணை வெளியிடப்பதற்கு யார் பொறுப்பு? அந்த அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அறிவிப்பாணையில் இடம் பெற்றுள்ள அரபு, பார்சி, பாலி மொழிகள் எந்த அடிப்படையில் இந்தியச் செம்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளன? என்பதை நீதிமன்றத்துக்குத் தெரிவிக்க வேண்டும்'' என்றனர்.
பின்னர் விசாரணையை அக்.20-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.