Published : 09 Oct 2020 01:07 PM
Last Updated : 09 Oct 2020 01:07 PM

எகிறும் பிராய்லர் கோழி முட்டை விலை: நாமக்கல்லுக்குப் படையெடுக்கும் வட மாநில வியாபாரிகள்

இதுவரை இல்லாத வகையில் பிராய்லர் கோழிப் பண்ணையிலேயே ஒரு முட்டையின் விலை ரூ.5.25 ஆக உயர்ந்துள்ளது. வட மாநிலங்களில் முட்டைக்கு டிமாண்ட் அதிகரித்திருப்பதால் வியாபாரிகள் நாமக்கல்லுக்குப் படையெடுக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

தமிழகத்தில் நாமக்கல், சேலம் மாவட்டங்களில் உள்ள சுமார் 1,000 பண்ணைகளில் சுமார் 10 கோடி பிராய்லர் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இங்கு தினசரி 8- 9 கோடி முட்டைகள் பெறப்படுகின்றன. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நிர்ணயிக்கும் விலைக்கு, பண்ணையாளர்களிடம் இருந்து வியாபாரிகள் முட்டையைக் கொள்முதல் செய்கின்றனர்.

இந்த நிலையில் இதுவரை இல்லாத விதமாக நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கணிசமாக அதிகரித்துள்ள‌து. கடந்த 2 வருடங்களுக்கு முன்புதான் அதிகபட்சமாகப் பண்ணையில் ஒரு முட்டை ரூ.5.16 என விற்பனை ஆனது. அதற்குப் பிறகு இன்றைய தேதிக்கு ரூ.5.25-க்கு விற்கப்படுகிறது. பண்ணை விலை இப்படி என்றால் வெளி மாவட்டங்களில் ஒரு முட்டை ரூ.6 முதல் ரூ.6.50 வரை சில்லறையில் விற்கப்படும் எனத் தெரிவிக்கிறார்கள் முட்டை உற்பத்தியாளர்கள்.

இதுகுறித்து நாமக்கல்லைச் சேர்ந்த கால்நடை மற்றும் விவசாயிகள் சங்கச் செயலாளர் செந்தில், 'இந்து தமிழ்' இணையதளத்திடம் பேசுகையில், ''எங்கள் பண்ணையில் மட்டும் 3 லட்சம் கோழிகள் உள்ளன. அவற்றின் மூலம் தினசரி 2.5 லட்சம் முட்டைகள் கிடைக்கின்றன. கடந்த 2 வருடங்களாகவே கோழிப் பண்ணையாளர்களுக்குப் பெருத்த நஷ்டம் ஏற்பட்டது.

முட்டைகள் தேக்கத்தால் ரூ.3 முதல் ரூ.3.25 வரையே பண்ணையில் முட்டைகள் விலைபோயின. அதில் ஒரு முட்டைக்கு உற்பத்திச் செலவிலேயே ரூ.1 வரை நஷ்டத்தைச் சந்தித்தோம். அதுவும் கரோனா காலத்தில், கோழி இறைச்சியாலும் முட்டையாலும்தான் அந்த வைரஸ் பரவுகிறது என வதந்தி பரவியது. அதனால் நிலைமை இன்னமும் மோசமானது.

பொதுவாகவே 2 மாதங்களுக்கு ஒரு முறை கோழி முட்டைக்கெனவே குஞ்சுகளைப் பண்ணைகளில் விடுவது எங்கள் வழக்கம். அவை 2 மாதங்கள் கழித்து முட்டையிடத் தொடங்கும். இரண்டு மாதங்களில் முட்டையிட்டு முடிவதற்குள் அடுத்த பேட்ச் குஞ்சுகள், கோழியாகி முட்டையிட ஆரம்பித்துவிடும். கரோனா கால பாதிப்பின் காரணமாகக் கடந்த பிப்ரவரி, மார்ச்சில் முட்டைக்கான குஞ்சுகளை வாங்கி விடவில்லை. எனவே, அடுத்தடுத்த மாதங்களில் முட்டை உற்பத்தி குறைந்தது. இந்தியாவிலேயே முட்டை உற்பத்தியில் முதலிடம் வகிப்பது நாமக்கல் மாவட்டம். அடுத்தது ஹைதராபாத். அதற்கு அடுத்த நிலையில்தான் வட மாநிலங்கள் உள்ளன. வட மாநிலப் பண்ணைகளிலும் இதேபோல் ஓரிரு பேட்ச்சுகள் முட்டைக்காகக் கோழிக்குஞ்சு வளர்க்கப்படவில்லை. எனவே எல்லா இடங்களிலும் ஒரேபோல கோழி முட்டைக்கு டிமாண்ட் ஏற்பட்டது.

இதற்கிடையே வடமாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில், கோழி முட்டை, கோழி இறைச்சி சாப்பிடுவது கரோனா பரவலைத் தவிர்க்கும் என்ற பிரச்சாரம் கிளம்பியது. இதையடுத்து முட்டை, கோழி இறைச்சியின் தேவை வரலாறு காணாத அளவு அதிகரித்தது. குறிப்பாக புனே, மும்பை ஆகிய நகரங்களில் முட்டைக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஹைதராபாத்திலும் முட்டை உற்பத்தி குறைந்திருப்பதால் வியாபாரிகள் நாமக்கல்லுக்கு வர ஆரம்பித்தனர்.

வழக்கமாக ஒரு லட்சம் முட்டை வாங்குபவர்கள்கூட தற்போது 1.40 லட்சம் முட்டைகளை வாங்கிச் செல்கின்றனர். இதனாலேயே முட்டை விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் 2 வருடங்களாக ஏற்பட்ட நஷ்டத்தை எங்களால் ஈடுசெய்ய முடிகிறது. இந்த விலை இன்னமும் ஓரிரு மாதங்களுக்காவது நீடிக்கும்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x