Published : 09 Oct 2020 12:45 PM
Last Updated : 09 Oct 2020 12:45 PM

கரும்பு விவசாயிகளுக்கு உதவிட திவால் சட்ட விதிமுறைகளைத் திருத்த வேண்டும்: வைகோ

வைகோ: கோப்புப்படம்

சென்னை

கரும்பு விவசாயிகளுக்கு உதவிட திவால் சட்ட விதிமுறைகளைத் திருத்த வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, வைகோ இன்று (அக். 9) வெளியிட்ட அறிக்கை:

"கடந்த ஐந்து ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் சர்க்கரை ஆலைகள், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.1,834 கோடி ஆகும். தமிழக அரசு இந்நிலுவைத் தொகையைப் பெற்றுத் தரக்கோரி கரும்பு விவசாயிகள் கடந்த ஒரு வாரமாக பல்வேறு இடங்களில் அறப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், விவசாயிகளின் குரலுக்கு தமிழக அரசு செவிமடுக்காமல், அலட்சியப்படுத்தி வருகின்றது.

இந்நிலையில், தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருமண்டங்குடி மற்றும் கோட்டூரில் இயங்கி வந்த திருஆரூரான் சர்க்கரை ஆலை கடந்த ஆண்டு திவால் நோட்டீஸ் அளித்துவிட்டது. கடலூர், தஞ்சை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உற்பத்தியாகும் கரும்பை இந்த ஆலை கொள்முதல் செய்து வந்தது.

விவசாயிகளுக்குத் தெரியாமல், அவர்கள் பெயரில் ஸ்டேட் வங்கி, கார்ப்பரேஷன் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் 350 கோடி ரூபாய் கடன் பெற்று, சர்க்கரை ஆலை நிர்வாகம் மோசடி செய்ததாகவும், கடந்த ஆண்டு புகார் எழுந்தது. இந்நிலையில், ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் திவால் நோட்டீஸ் அளித்தது. இதைப் போலவே அம்பிகா சர்க்கரை ஆலையும் திவால் நோட்டீஸ் அளித்துள்ளது.

இதனையடுத்து, தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் திவால் நோட்டீஸ் அளித்துள்ள சர்க்கரை ஆலைகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள திவால் சட்ட விதிமுறைகளின்படி கரும்பு விவசாயிகளுக்கு அளிக்க வேண்டிய நிலுவைத் தொகை கிடைக்க வாய்ப்பில்லை.

எனவே, திவால் சட்டத்திட்ட விதிமுறைகளில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று சென்னை வந்திருந்த மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கரும்பு விவசாயிகள் நேரடியாக கோரிக்கை வைத்துள்ளனர்.

சர்க்கரை ஆலைகளுக்கு வங்கிகள் அளித்துள்ள கடன்களுக்காக நிறுவன சொத்துகளைக் கைப்பற்றும்போது, சர்க்கரை உற்பத்தி மூலப்பொருளான கரும்பை உற்பத்தி செய்து அளிக்கும் விவசாயிகளுக்குச் சேர வேண்டிய நிலுவைத் தொகையை வழங்கிட முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோருவது நியாயமானது ஆகும்.

எனவே, திவால் நோட்டீஸ் அளித்துள்ள சர்க்கரை ஆலைகளிடமிருந்து கைப்பற்றப்படும் சொத்துகள் மூலம் பெறப்படும் நிதியை முன்னுரிமை அடிப்படையில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கிட ஏதுவாக திவால் சட்டவிதிமுறைகளில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்".

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x