

மேட்டூர் அணை நீர்த்தேக்கப் பகுதியில் படர்ந்துள்ள பாசிப் படலம் நுண்ணுயிர் திரவக் கரைசலைக் கொண்டு அகற்றும் பணி தொடங்கியது.
காவிரியில் கடந்த ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, செப்டம்பரில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 அடியை எட்டி நிரம்பியது. அத்துடன் தொடர்ந்து சில மாதங்கள் வரை அணையில் 100 அடிக்கு மேல் நீர் இருந்தது. இதனால், அணையின் நீர்தேக்கப் பகுதிகள் முழுமையாக நீரில் மூழ்கியிருந்தன. அப்போது, அணையின் நீர்த்தேக்கப் பகுதிகளில் ஆங்காங்கே, கரும் பச்சை நிற பாசிப் படலம் ஏற்பட்டு, அதில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து, அப்போது, பொதுப்பணித்துறை, வேளாண் துறை, வருவாய்த்துறை சார்பில் பாசிப் படலம் அகற்றப்பட்டது. எனினும், தொடர்ந்து பாசிப்படலம் ஏற்பட்டு வந்தது.
தற்போது, மேட்டூர் அணை 98 அடி நீர் நிரம்பியுள்ள நிலையில், பண்ணவாடி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் தேங்கியுள்ள நீரில் மீண்டும் துர்நாற்றத்துடன் கூடிய பாசிப்படலம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, மேட்டூர் வட்டாட்சியர் சுமதி, மேட்டூர் அணை உதவிப் பொறியாளர் மதுசூதனன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) செல்வமணி உள்ளிட்ட அதிகாரிகள், பண்ணவாடி நீர்த்தேக்கப் பகுதியில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, ராசிபுரம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மூலம் நுண்ணுயிர் கரைசலை பாசி படர்ந்த இடங்களில் தெளிப்பான் மூலம் தெளித்து பாசியை அகற்றும் பணி தொடங்கியது.
இதுதொடர்பாக வட்டாட்சியர் சுமதி கூறியதாவது:
மேட்டூர் அணையை ஒட்டிய பகுதியில் விவசாயம் மேற்கொள்பவர்கள் பயன்படுத்தும் உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகளால், இது போன்ற பாசிப்படலம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. இதனை, நுண்ணுயிர் கரைசலைக் கொண்டு அகற்றி வருகிறோம். இதன் மூலம் துர்நாற்றம் குறையத் தொடங்கியுள்ளது. தொடர்ந்து 10 நாட்கள் வரை இந்தப் பணியை தொடர திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
அணைக்கு நீர்வரத்து சரிவு
மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 98.63 அடியாகவும், நீர் இருப்பு 63.08 டிஎம்சி-யாகவும் இருந்தது. அணைக்கு விநாடிக்கு 8,977 கனஅடி நீர்வரத்து இருந்தது. டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 16 ஆயிரம் கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 950 கனஅடியும்நீர் திறந்து விடப்பட்டிருந்தது. இந்நிலையில், நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 8,105 கனஅடியானது. நீர்மட்டம் 98.05 அடியாகவும், நீர்இருப்பு 62.34 டிஎம்சி-யாகவும் உள்ளது.