தொல்லியல் முதுநிலைப் பட்டயப் படிப்புக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியில் தமிழ் மொழி சேர்ப்பு; பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி நன்றி

முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்
முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்
Updated on
1 min read

தொல்லியல் முதுநிலைப் பட்டயப் படிப்புக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியில் முதுகலை பட்டப்படிப்பில் தமிழ் மொழியைச் சேர்த்ததற்கு முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மத்திய கலாச்சாரத் துறையின் கீழ் செயல்படும் இந்தியத் தொல்லியல் துறை, தீனதயாள் உபாத்யாயா தொல்லியல் நிறுவனத்தில் 2 ஆண்டு தொல்லியல் முதுநிலைப் பட்டயப் படிப்புக்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது.

இந்தப் படிப்புக்கான அறிவிப்பில், குறைந்தபட்ச கல்வித் தகுதியாக முதுகலைப் பட்டப்படிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, தொல்லியல் சார்ந்த இந்திய செம்மொழிகளான சம்ஸ்கிருதம், பாலி, பிராகிருதம், அரபிக் அல்லது பெர்சியன் மொழிகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும். இந்த மொழிகளில் சம்ஸ்கிருதம், பாலி, பிராகிருதம் ஆகிய செம்மொழி அந்தஸ்து பெற்ற மொழிகள் இடம்பெற்றுள்ளன. ஆனால், தமிழ் மொழி இடம்பெறவில்லை.

இதையடுத்து, அப்பட்டியலில் தமிழ் மொழியையும் சேர்க்க வேண்டும் என, தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி நேற்று (அக். 08) கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து, நேற்று வெளியான புதிய அறிவிப்பில், தமிழ் மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளதற்கு பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி: கோப்புப்படம்
பிரதமர் நரேந்திர மோடி: கோப்புப்படம்

இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று (அக். 09) பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், "தீனதயாள் உபாத்யாயா தொல்லியல் நிறுவனத்தில் 2 ஆண்டு தொல்லியல் முதுநிலைப் பட்டயப் படிப்புக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியாக குறிப்பிடப்பட்டுள்ள முதுகலைப் பட்டப்படிப்பில் தமிழ் மொழியைச் சேர்க்க வேண்டும் என, நான் வலியுறுத்தியதையடுத்து உடனடியாக தமிழ் மொழியைச் சேர்க்க நடவடிக்கை எடுத்ததற்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in