Published : 09 Oct 2020 09:44 AM
Last Updated : 09 Oct 2020 09:44 AM

வேடசந்தூர் சிறுமி பாலியல் வன்கொடுமை; குற்றவாளிகளைத் தண்டிக்கும் வகையில் வழக்கை நடத்த வேண்டும்: கே.எஸ்.அழகிரி

வேடசந்தூர் அருகே சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவர் விடுதலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (அக். 09) வெளியிட்ட அறிக்கை:

"திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே குறும்பட்டியைச் சேர்ந்த 13 வயதுச் சிறுமி ஒருவர், கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமைக்குப் பலியானார். அச்சிறுமியின் உடலில் மின்சாரம் பாய்ச்சி, மார்பு அறுக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அவலநிலை ஏற்பட்டது. இக்குற்றத்தைச் செய்ததாக எதிர்வீட்டைச் சேர்ந்த கிருபாகரன் என்பவர் கைது செய்யப்பட்டு காவல்துறையினர் வழக்குத் தொடுத்தனர்.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி இவ்வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் குற்றவாளியாகக் கருதப்பட்ட கிருபாகரனைத் தண்டிக்க போதிய ஆதாரம் இல்லை என்று கூறி நீதிபதி விடுதலை செய்திருக்கிறார். இந்தத் தீர்ப்பு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த கயவர்களைத் தண்டிக்கிற வகையில் காவல்துறையினர் வழக்கை சரிவர நடத்தவில்லை என்று கடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகளைத் தண்டிக்கிற வகையில் வழக்கை சரிவர நடத்தாத காவல்துறையினரைக் கண்டித்தும், நீதி விசாரணை கோரியும் இன்று வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் உள்ள சலூன் கடைகள் கடையடைப்புப் போராட்டம் நடத்துவதென முடிவு செய்திருக்கிறது.

எனவே, சிறுமிக்கு நீதி வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையைத் தமிழக அரசு பரிசீலனை செய்து குற்றவாளிகளைத் தண்டிக்கிற வகையில் வழக்கை நடத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்".

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x