

இந்திய தொல்லியல் துறையின் முதுநிலை பட்டயப் படிப்புக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியில் முதுகலை தமிழ் பட்டப் படிப்பையும் சேர்க்க உத்தரவிடுமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து பிரதமருக்கு அவர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மத்திய கலாசாரத் துறையின் கீழ் செயல்படும் இந்திய தொல்லியல் துறை, தீன்தயாள் உபாத்யாயா தொல்லியல் நிறுவனத்தில் 2 ஆண்டு தொல்லியல் முதுநிலை பட்டயப் படிப்புக்கான அறிவிப்பை சமீபத்தில், வெளியிட்டது. இது தொழில்ரீதியாக நமது புகழ்பெற்ற கடந்த காலத்தை வெளிக்கொண்டு வருவதற்கான திறமையாளர்களை உருவாக்குவதற்கான பொருத்தமான பாராட்டத்தக்க முயற்சியாகும். அதே நேரம், இந்த படிப்பில் சேர்வதற்கான சில நெறிமுறைகள் தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள ஆர்வலர்களுக்கு தடையாக உள்ளது.
இந்த படிப்புக்கான அறிவிப்பில், குறைந்தபட்ச கல்வித் தகுதியாக முதுகலை பட்டப்படிப்பு நிர்ணயம்செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, தொல்லியல் சார்ந்த இந்தியசெம்மொழிகளான சம்ஸ்கிருதம், பாலி, பிராகிருத், அரபிக் அல்லதுபெர்சியன் மொழிகளில் முதுகலைபட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும். துரதிர்ஷ்டவசமாக, பட்டியலிடப்பட்ட மொழிகளில், 2005-ம் ஆண்டு செம்மொழியாக அறிவிக்கப்பட்ட சம்ஸ்கிருதம் இடம்பெற்றுள்ளது. ஆனால், அதற்கு முன்னதாக 2004-ம்ஆண்டு முதன்முதலில் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தமிழ்முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து மொழிகளிலும் உள்ள 48 ஆயிரம் கல்வெட்டுகள் இதுவரை இந்திய தொல்லியல் துறை மற்றும் இதர நிறுவனங்களால் வெளியிடப்பட்டுள்ளன. இதில், 50 சதவீதத்துக்கும் அதிகமாக அதாவது 28 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழ்மொழியில் உள்ளவை.
இவற்றை கருத்தில் கொண்டு, தொல்லியல் முதுநிலை பட்டயப்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், முதுகலை தமிழ் பட்டப் படிப்பையும் குறைந்தபட்ச தகுதியில் ஒன்றாக சேர்க்கும் வகையில், விதிகளில் உரிய திருத்தம் மேற்கொள்ளுமாறும், புதிய அறிவிப்புவெளியிடுமாறும் இந்திய தொல்லியல் துறைக்கு அறிவுறுத்தும்படி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இந்த விஷயத்தில் தாங்கள் உடனடியாக தலையிடுவது பாராட்டத்தக்கதாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.